இலங்கை டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு பதிலாக ஆகிப் நபி

 

புது டெல்லி: இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில், காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக அறிமுக வேகம் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது.

முதல் டெஸ்ட் காலே சர்வதேச அரங்கிலும் (ஆக.15-19), 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பு பிரேமதாசா அரங்கிலும் (ஆக. 23-27) நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக, இந்திய அணி கொழும்புவில் 3 நாள் பயிற்சி ஆட்டம் (ஆக.7-9) ஒன்றிலும் விளையாடுகிறது. முழங்கால் மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி (29 வயது) இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 ரஞ்சி சீசனில் இவர் 104 விக்கெட் வீழ்த்தி தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 2025-26 ரஞ்சி தொடரில் மட்டும் 60 விக்கெட் கைப்பற்றி ஜம்மு & காஷ்மீர் அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைக்க உதவியிருந்தார். சமீபத்தில் இலங்கை சென்று விளையாடிய இந்தியா ஏ அணியிலும் இடம் பெற்றிருந்த இவர் 2 போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தினார். பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால், இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய முதல் ஜம்மு காஷ்மீர் வீரர் என்ற பெருமையை ஆகிப் நபி பெறுவார்.

இந்தியா: கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பன்ட், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, தேவ்தத் படிக்கல்,குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், சரன்ஷ் ஜெயின், ஆகிப் நபி. சாய் சுதர்சன் உடல்தகுதியை நிரூபித்தால் தொடரில் பங்கேற்கலாம்.

Related Stories: