×

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிய மனு தள்ளுபடி

 

மதுரை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த சீராய்வு மனு: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளித்து உள்ளன. ஆனாலும் இங்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால் விபத்துகள், நோய்கள், கொலை உள்ளிட்ட குற்றங்கள், தற்கொலைகள் போன்ற சம்பவங்களால் லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.

எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மதுவிலக்கு என்பது ஒரு அரசின் கொள்கை சார்ந்த முடிவு எனக் கூறி தள்ளுபடி செய்தது. எனவே, அந்த உத்தரவை மறு பரிசீலனை செய்து எனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர், மனுதாரர் கோரும் விவகாரம் அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. இதில் எந்தவித நிவாரணத்தையும் இந்த நீதிமன்றத்தால் வழங்க இயலாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Tamil Nadu ,Madurai ,High Court ,Gandhirajan ,Virudhunagar ,Court ,
× RELATED மின்கட்டண கணக்கீட்டில் வேறுபாடுகள்...