- அமைச்சர்
- விஜய் பாலாஜி
- நாகர்கோவில்
- அரல்வாயிமோசிச்சி
- கன்னியாகுமரி மாவட்டம்
- நேவர்ஸ் கூட்டுறவு சங்கம்
- Vadassery
நாகர்கோவில்: வருகிற பொங்கலுக்கு 4 முழ வேட்டிதான் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலை மற்றும் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை நேற்று அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநில கைத்தறி உயர்மட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கடந்த 3 மாதங்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர்.
அரசு தற்போது 2027 பொங்கலுக்கு 4 முழ (2.00 மீட்டர்) வேட்டிகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள கைத்தறி மற்றும் பெடல் தறிகளில் இந்த புதிய மாற்றத்தை செய்ய ஒரு தறிக்கு சுமார் 11,000 முதல் 14,000 ரூபாய் வரை செலவாகும். சாதாரண நெசவாளர்களால் இந்தத் தொகையை செலவு செய்ய இயலாது. புதிய ரக உற்பத்திக்குக் கூலி குறைவாகவே கிடைக்கும் என்பதால் ,பெரும்பாலான நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நிருபர்களிடம் கூறிய அமைச்சர் விஜய் பாலாஜி, வரும் பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 4 முழ வேட்டிதான் வழங்கப்படும் என்றார். முன்னதாக ஆரல்வாய்மொழியில் கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த தொழிலாளர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் விஜய்பாலாஜி தெரிவித்தார்.
