×

ஒகேனக்கல்லில் தேமுதிக ஆர்ப்பாட்டம் கர்நாடக முதல்வர் சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்: பிரேமலதா பேச்சு

 

தர்மபுரி: காவிரியில் மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகா அரசை கண்டித்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுதீஷ் எம்பி, விஜய பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.  அப்போது பிரேமலதா பேசியதாவது: ராகுல்காந்தி சென்னைக்கு வந்துள்ளார்.

அப்படியே போய் முதல்வரை சந்தியுங்கள். தவெக கூட்டணியில் இருக்கீங்க. கர்நாடகாவில் ஆட்சி உங்க கட்சியோடது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்று தருவது உங்கள் கடமை. ஆகஸ்ட் 3ம் தேதி, முதல்வர் விஜய் கர்நாடகா போக கூடாது என பலர் சொல்றாங்க. நான் சொல்றேன். முதல்வர் கர்நாடகாவுக்கு செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட வேண்டும். கர்நாடகாவுக்கு விஜய் வரக்கூடாது என சொல்லும் சிவக்குமார், தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். வீரப்பன் இப்போது இல்லாததால், கர்நாடகாவுக்கு குளிர்விட்டு போச்சு. இவ்வாறு அவர் பேசினார்.

* சென்னையில் ஆய்வு செய்யும் விஜய் ஒகேனக்கல் வரணும்

பிரேமலதா அளித்த பேட்டியில், காவிரி பிரச்னையில் தமிழக முதல்வர், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். காவிரி நீருக்காக பலமுறை நீதிமன்றத்திற்கு சென்றும் தீர்வில்லை. அதற்கு தான், முதல்வர் கர்நாடகா செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். உங்கள் சுயநலத்திற்காக மூகாம்பிகை கோயிலுக்கு செல்கிறீர்கள், ஏன் மக்களுக்காக போக கூடாதா?. முதல்வர் சென்னையில் ஆய்வு செய்கிறார். அவர் காவிரி ஆற்றை பார்க்க வேண்டும். ஒகேனக்கல், மேட்டூர் டெல்டா மாவட்டங்களுக்கு வரவேண்டும்.

தமிழகம் கடந்த காலங்களில் மின்மிகை மாநிலமாக இருந்தது. தற்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. முதல்வர் பகுதியிலேயே மின்வெட்டு என மக்கள் ரோட்டுக்கு வந்து போராடுறாங்க. அதுமட்டுமில்லாமல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது‌. மின்வெட்டை சரி செய்து மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். முதல்வர் நிருபர்களை சந்தித்து பேச வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றார்.

Tags : DMDK ,Hogenakkal ,Karnataka ,Chief Minister ,Shivakumar ,Tamil Nadu ,Premalatha ,Dharmapuri ,Hogenakkal, Dharmapuri district ,General Secretary ,Premalatha Vijayakanth MLA ,Karnataka government ,Mekedatu dam ,Cauvery ,Sudheesh ,Vijaya Prabhakaran… ,
× RELATED மின்கட்டண கணக்கீட்டில் வேறுபாடுகள்...