மதுரை: காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவையில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் நேற்று அளித்த பேட்டி:தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்கும் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்று ஆணைய உத்தரவுகளுக்கு எதிராக கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது.
கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டிற்கு எதிராக பேசி வருகிறார். ஆகவே, சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆக. 3ம் தேதி (நாளை) தமிழ்நாடு அரசு சார்பில், முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களில் காவிரியிருந்து தமிழ்நாட்டிற்கு 17 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து வகையிலும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
காவிரி விவகாரத்தில் சட்டப்பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராகவே பாஜவுடன் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனும் ஒற்றை நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஆனால் தண்ணீர் பெறுவதில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளன.
சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் குறித்து ஒருமனதாக விவாதித்தப் பிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய தேவையில்லை. காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எந்த ஒரு சுமுக தீர்வையும் எட்டக்கூடாது என்கிற எண்ணத்தில் உள்ள அரசியல் கட்சிகளை வைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடியாது. காவிரி விவகாரத்தில் இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் எடுத்த முடிவுகளை முதல்வர் விஜய் ஆராய்ந்து வருகிறார். இவ்வாறு தெரிவித்தார்.
* 100 பேருக்கு மட்டுமே மின் கட்டண குளறுபடி
‘தமிழகத்தில் உள்ள 15,000 வீடுகளில் மின் கணக்கு மறு அளவீடு செய்யப்பட்டது. அதில் 100 பேருக்கு மட்டுமே குளறுபடிகள் உள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் தான் மின் கட்டணம் அதிகரித்துள்ளது’ என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
