×

பழநி ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் கைதான 4 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

 

திண்டுக்கல்: பழநி ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் கைது செய்த 4 பேரை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு 1.40 ஏக்கர் நிலத்தை, ரூ.2 கோடிக்கு முறைகேடாக தனியாருக்கு விற்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நில புரோக்கரும், பத்திர எழுத்தருமான ஜெயபிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர். அவர் ஜூலை 29ல் மதுரை விமான நிலையத்திலிருந்து அவர் வெளி மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் இருப்பிடத்தை அறிந்து சிபிசிஐடி சிறப்பு தனிப்படையினர் வெளிமாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகிய 4 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் திண்டுக்கல் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வரும் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் வெள்ளத்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டார். சேதுபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

* ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு

இவ்வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், கடந்த 2025 ஜனவரி மாதம் முழுவதும் குஜிலியம்பாறையிலும், அதன் பிறகு 2025 பிப்ரவரி தொடங்கி 2026 ஜூன் மாதம் வரை ஒட்டன்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் பணிபுரிந்து வந்தார். இங்கு பணிபுரிந்த வந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.  பத்திரப்பதிவு துறை டிஐஜி சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர், ஒட்டன்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். இதே போல், குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : CBCID ,Dindigul ,Palani ,Dandapani Swamy Math ,Palani, Dindigul district… ,
× RELATED மின்கட்டண கணக்கீட்டில் வேறுபாடுகள்...