மாமல்லபுரம்: திருப்போரூர் அருகே கேளம்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கம்பெனி சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் பகுதியில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான பஸ், வழக்கம் போல இன்று காலை மாமல்லபுரம் அருகே இசிஆர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கம்பெனியின் பஸ்சின் பின்னால் வேகமாக மோதியது. இதில் தனியார் பஸ்சிஸ் பின்பகுதி சேதமடைந்தது. அரசு பஸ்சின் முன்பகுதி சேதமடைந்து, முன்பக்க கண்ணாடிகள் உடைந்தது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
