மதுரை: பால் பாக்கெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பியது மதுரை ஆவின் நிறுவனம். மதுரை ஆவினில் நீல நிற பால் பாக்கெட்டில் பிளாஸ்டிக் நெடியுடன் சேர்ந்து கெமிக்கல் நெடி வீசுவதாக கூறி புகார்கள் பொதுமக்களிடம் பெறப்பட்ட நிலையில் நடவடியானது எடுக்கப்பட்டுள்ளது.
புகார் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர் முழுவதுமாக சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து தினமும் ஒரு லட்சத்திற்கும் மேலான பால் விநியோகம் செய்யப்படுகிறது.
மதுரையில் உள்ள பல்வேறு டிபோக்கள் மூலம் இந்த பால் பாக்கெட்கள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பால் பாக்கெட்களில் இருந்து கெமிக்கல் நெடி வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள். உடனடியாக ஆவின் மதுரை நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில் நீல் நிற பாக்கெட் பிளாஸ்டிக் ரோலில் இருந்து நெடி ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி அடிப்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலிமர் ஃபிலிம்களை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் ஆவினுக்கு பெங்களூரில் உள்ள திருமூர்த்தி பாலிகெம் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. பாலித்தீன் ஃபிலிம்களில் ரசாயன நெடி வந்ததால் 160 ரோல்களை மதுரை ஆவின் மண்டலம் திருப்பி அனுப்பியது.
திருமூர்த்தி பாலிகெம் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க மதுரை ஆவின் பரிந்துரை செய்துள்ளது. தொடர்ந்து இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு குவாலிட்டி கட்டுப்பாடு அதிகாரிகள் கூடுதலான நடவெடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
