சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. நெல் உற்பத்தி குறைவு, வெளிமாநிலங்களில் இருந்து நெல் வரத்து சரிவு உள்ளிட்ட காரணங்களால் அரிசி விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், காவேரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது.
தமிழகத்தில் விளையும் நெல்லின் பெரும்பகுதி பொது விநியோகத் திட்டத்திற்காக அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பாப்பட்லா, கர்நாடக பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், அங்கும் மழை குறைவால் நெல் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அரிசி ஆலைகள் அதிக விலைக்கு நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கமாக, கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கர்நாடக பொன்னி, சன்ன ரகம் மற்றும் சில பாஸ்மதி அரிசி வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிசி ஆலை உரிமையாளர் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு முன்பைவிட தற்போது ஒரு நெல் மூட்டையின் விலை ரூ.600 முதல் ரூ.700 வரை உயர்ந்துள்ளதாகவும், அதனால் அரிசி விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து நெல் வரத்து குறைந்துள்ளதால், ஆலைகளில் அரிசி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரிசி விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிரியாணி கடைகளுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், அரிசி மட்டுமின்றி போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளும் உயர்ந்துள்ள நிலையில், உணவின் விலையை உடனடியாக உயர்த்த முடியாததால் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். இதே நிலை தொடர்ந்தால், ஹோட்டல் தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை உயர்வு, வரவு-செலவை திட்டமிட்டு வாழும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பப் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், கடந்த வாரம் கிலோ ரூ.50 முதல் ரூ.52 வரை விற்பனையான அரிசி, தற்போது ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் முன்பு வாங்கிய அளவில் தற்போது வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். குடும்பச் செலவு கணிசமாக உயர்ந்திருப்பதால் அன்றாட வாழ்க்கையை சமாளிப்பது சிரமமாகிவிட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
