மம்தா இருந்திருந்தால் காங். இப்படி இருக்காது பிரியங்கா, திரிணாமுல் எம்பி கலகலப்பான உரையாடல்

 

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில அதிருப்தி எம்பிக்களுக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி கல்யாண் பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மக்களவையில் பெண் எம்பிக்களுக்கு எதிராக அவதூறான மற்றும் அவை மரபுகளுக்கு மாறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் தனது கழுத்தில் மக்களவையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 20 துரோகிகள் என்ற தலைப்புடன் கூடிய புகைப்படங்களை ெதாங்கவிட்டு போராட்டம் நடத்தினார். அதை காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பார்த்தார்.

அப்போது அதிருப்தி எம்பிக்களில் சிலர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் என்றும் பின்னர் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரான எம்பி கல்யாண் பானர்ஜி, பிரியங்கா காந்தியிடம் 1997ம் ஆண்டு நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து மம்தா பானர்ஜியை வெளியேற்றினீர்கள். அப்படி செய்திருக்காவிட்டால் காங்கிரசின் நிலை இப்படி இருந்திருக்காது என்றார்.

இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி அன்பையும் மரியாதையையும் அளித்தது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான் என்றார். இதற்கு கல்யாண் பானர்ஜி, ஆம், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ் கட்சியுடன் கைகோர்த்தது. ஆனால் எங்கள் போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக இருந்தது என்று தெரிவித்தார்.

* பிரியங்கா காந்திக்கு கண்டனம்: 200 கல்வியாளர்கள் கடிதம்

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியை பசு கோமிய நிபுணர் என மக்களவையில் பிரியங்கா காந்தி பேசியதற்கு 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில்,’ கருத்துக்கள் கண்ணியத்துடன் விவாதிக்கப்படும் இடமாகவும், தனிநபர்கள் கேலிச்சித்திரங்களைக் கொண்டு அல்லாமல் அவர்களின் வாதங்களின் வலிமையைக் கொண்டு மதிப்பிடப்படும் இடமாகவும் நாடாளுமன்றம் நீடிக்க வேண்டும்.

ஒரு அறிஞரின் கருத்துக்களின் சாராம்சத்தை ஆராயாமல், அவரை ஒரு பட்டத்தின் மூலம் நிராகரிப்பது, நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனும் வளர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையையே சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

* ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறான மற்றும் நாகரிகமற்ற சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சபாநாயகரின் உத்தரவையும் அவையின் நடைமுறைகளையும் மீறி செயல்பட்டதாக பாஜ எம்பி அனுராக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் பரிந்துரைக்க வேண்டும் என்று நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: