ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள்.!! ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட பள்ளிகள் இயங்கி வருவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் மட்டும் 16,000-த்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் இயங்குவதாக இது தொடர்பான அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்-ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்குள் இருந்த போதிலும், ஆசிரியர் பணியமர்த்தலில் பெரும் இடைவெளிகள் இருப்பதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2025-26 ஆம் ஆண்டிற்கான UDISE+ தரவுகளின்படி, பல்வேறு நிர்வாக வகைகளின் கீழ் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இந்தியா முழுவதும் 1,00,843 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பட்டியலில் 16,357 பள்ளிகளுடன் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 9,827 பள்ளிகள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,269 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரை கொண்டு இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகாவில் 8,042 ஒற்றை ஆசிரியர் பள்ளிகளும், உத்தரப்பிரதேசத்தில் 7,874, ராஜஸ்தானில் 7,200 மற்றும் மேற்கு வங்கத்தில் 6,769 பள்ளிகளும் உள்ளன. நாட்டில் உள்ள ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் ஏறக்குறைய 65 சதவீதம் இந்த ஏழு மாநிலங்களிலேயே இருக்கும் தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் அளித்த பதிலில், கல்வித் துறைக்கான இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த விவரங்களை வழங்கினார்.

Related Stories: