டன்னுக்கு ரூ.4,500 வழங்க வலியுறுத்தி வயலில் இறங்கி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: கரும்பு டன்னுக்கு 4500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி கைகளில் கரும்பு மற்றும் மோடி உருவ பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு 2026-2027ஆம் ஆண்டு கரும்பிற்கான விலையை கடந்த ஆண்டை விட வெறும் 100 ரூபாய் மட்டுமே டன் ஒன்றுக்கு உயர்த்தி உள்ளது. இந்த விலை அறிவிப்பு எந்த விதத்திலும் நியாயமற்றது. காரணம் ஒன்றிய அரசின் கரும்புக்கான விலை அறிவிப்பிற்கு பிறகு தான் டீசல், பெட்ரோல் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளன.

அனைத்து உரங்களின் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.225 முதல் 425 ரூபாய் வரை ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதால் வேளாண் உற்பத்தி செலவினங்கள் 25 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன.

வேளாண் இயந்திரங்களின் வாடகை, கூலி உயர்வு, இடுபொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கூனஞ்சேரியில் உள்ள வயலில் இறங்கி விவசாயிகள் கரும்பு மற்றும் மோடி உருவ பதாகையை வைத்துக்கொண்டு, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: