பெரியபாளையம் அருகே 18 பேர் உயிரிழந்த நிலையில் கிங்பிஷர் பீர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு: 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு வாந்தி-மயக்கம்

சென்னை:திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியில் அமைந்துள்ள யுனைடெட் புருவரிஸ் எனப்படும் கிங்பிஷர் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த, தொழிற்சாலையில் பீர் பாட்டில்களை நிரப்புவதற்கு கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் பயன்படுத்தப்படுவதுடன், பீர் வகைகளை குளிர் விப்பதற்காக அமோனியா வாழ்வும் பயன் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அதாவது, பீர் தயாரிப்பின்போது பீரின் இயல்பான சுவை மாறாமல் இருக்கவும், அதில் நுரை மற்றும் புத்துணர்ச்சி குறையாமல் பாதுகாக்கவும் இந்த வாயுக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில பிரீமியம் ரக பீர் வகைகளில் மென்மையான நுரை அமைப்பை பெறவும் பீர் பாட்டிலுக்குள் ஆக்சிஜன் புகுந்து பீர் கெட்டுப் போகாமல் தடுக்கவும் நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த, தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பீர் வகைகளை குளிர் விற்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிலிண்டரில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்பட 6 பேருருக்கு மூச்சு திணறல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த தொழிற்சாலையின் சார்பில் மருத்துவக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, அமோனியா வாயு கசிவு தொடர்பாக யுனைெடட் புருவரீஸ் நிறுவனம் அளித்த விளக்கத்தில்,  ‘அமோனிய வாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் இருந்து முற்றிலுமாக அந்த வாயு வெளியேறுவது தடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்ட உடனே, எங்களது குழுவினர் அதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ளோம். சட்ட விதிகளுக்கு ஏற்ப நடந்து வருகிறோம். எங்களது தொழிலாளர்கள் மற்றும் ஆலையை சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், என்று கூறியுள்ளது.

* வட்டாட்சியரை பொதுமக்கள் முற்றுகை
யுனைடெட் புருவரிஸ் எனப்படும் கிங்பிஷர் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையில், அமோனியா வாவு கசிவு ஏற்பட்ட பீர் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் தொழிற்சாலைக்குள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், யுனைடெட் புருவரிஸ் எனப்படும் கிங்பிஷர் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மாவட்ட கலெக்டர் கவிதா உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில், வட்டாட்சியர் சரண்யா விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடித்துக்கொண்டு வெளியே சென்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் வட்டாட்சியரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு என்ன ஆனது என்பதை நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் அவற்றை தொழிற்சாலை சார்பில் அழைக்கவில்லை என்றும் நிறுவனம் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு என்ன ஆனது என்பதை விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: