புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தங்களுடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி நட்டா, ஜிதேந்திரசிங்கிடம் கரப்பான்பூச்சி கட்சி நிர்வாகிகள் மீண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து, இது பற்றிய முடிவை இன்று அறிவிப்பதாக ஒன்றிய அமைச்சர்கள் அறிவித்தனர். நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது.
இந்த பிரச்னைக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், பெற்றோர்கள் மீது போலீசார் சரமாரி தடியடி நடத்தினர். கண்ணீர்குண்டுகள் வீசப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் 5வது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தர்மேந்திரபிரதான் அமைச்சர் பதவியில் இருந்து விலகும்வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். நேற்று முன்தினம் மட்டும் தொடர்ந்து 4 முறை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் நேற்று பேச்சுவார்த்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சம்மதித்தது.
ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி நட்டா, ஜிதேந்திரசிங் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் எந்தச் சமரசமும் இல்லை. மேலும், ஜூலை 20 அன்று கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மே 3 அன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மேலும் இந்திய அரசு, விரைவு அதிரடிப் படை தலைவர் மற்றும் டெல்லி காவல் ஆணையர் ஆகியோர், தங்கள் படைகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த தகவலை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்தார். டெல்லி வித்தல்பாய் படேல் இல்லத்தில் நடைபெற்ற இந்த இரண்டு மணி நேரக் கூட்டம், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறையில் உள்ள பிற முறைகேடுகள் தொடர்பான போராட்டங்களுக்கு சுமூகமான தீர்வைக் காணும் நோக்கில் நடத்தப்பட்டது. அப்போது அமைச்சர்கள் 24 மணி நேரம் அவகாசம் கோரினர். இதுபற்றி அமைச்சர் ஜேபி நட்டா கூறுகையில்,’ கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகளை நாங்கள் கேட்டறிந்தோம்.
நாங்கள் மீண்டும் சனிக்கிழமை சந்தித்து பேசுவோம்’ என்றார். அப்போது, ‘தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்தச் சமரசமும் இல்லை என்பதை ஒன்றிய அமைச்சர்களிடம் நாங்கள் தெரிவித்தோம்’ என்று கரப்பான்பூச்சி ஜனதாகட்சியின் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தெரிவித்தனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வாய்ப்பை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.
பதவி விலகுவது என்பது மிக எளிதான செயல் என்றும், அது பொறுப்பிலிருந்து தப்பியோடும் செயலாகவே அமையும் என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தர்மேந்திரபிரதான் பதவி விலகுவதற்கே இடமில்லை. பதவி விலகி பொறுப்பிலிருந்து தப்பியோடுவது எளிதான காரியம். மக்கள் எங்களுக்குத் தீர்ப்பளித்துள்ளனர், நாங்கள் அதை நிறைவேற்றுவோம் என்று ஒன்றிய அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெறும் அடையாள நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதிலேயே அரசு கவனம் செலுத்தி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. தேர்வு அமைப்பில் உள்ள குறைபாடுகளின் விரிவான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது; விரைவில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளையும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட பல கும்பல்கள் ஏற்கனவே முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்றும் அவர்கள் கூறினர். தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மீண்டும் வலியுறுத்திய அதே நாளில் ஒன்றிய அரசின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
* டெல்லியில் பாதுகாப்பு பணிக்காக மேலும் 10 சிஆர்பிஎப் படை குவிப்பு
டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், சட்டீஸ்கரிலிருந்து மேலும் 10 சிஆர்பிஎப் படைப்பிரிவுகளை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படை தனது டெல்லி மெட்ரோ பாதுகாப்புப் பிரிவினருக்கான விடுமுறைகளையும் ரத்து செய்துள்ளது. சுதந்திர தினத்திற்கு முன்னதாக ெடல்லியில் நிறுத்தப்படவிருந்த அனைத்து மத்திய ஆயுதக் காவல் படை பிரிவுகளையும் முன்கூட்டியே பணிக்கு வருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் சுமார் 150 சிஏபிஎப் படைப்பிரிவுகள் டெல்லியில் குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சிஏபிஎப் படைப்பிரிவில் சுமார் 100 வீரர்கள் இருப்பார்கள். சட்டம்-ஒழுங்கு பணிகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவ, ஏற்கனவே சுமார் 100 படைப்பிரிவுகள் டெல்லியில் பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து 20 சிஆர்பிஎப் படைப்பிரிவு வீரர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மூன்று3 விரைவு அதிரடிப் படை பிரிவுகள் மற்றும் எஸ்எஸ்பி, பிஎஸ்எப் , ஐடிபிபி போன்ற பிற சிஏபிஎப் பிரிவுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. டெல்லி பிராந்தியத்தில் உள்ள விரைவு ரயில் கட்டமைப்பின் 250 நிலையங்களிலும் பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்பை வழங்க சிஐஎஸ்எப் சுமார் 13,000 வீரர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
* ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் திடீர் ராஜினாமா
ஒன்றிய ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் பாஜ தலைவரான ரவ்னீத் சிங் பிட்டு, ஒன்றிய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக அவரது பதவிக்காலம் ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. புதிதாக அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படவில்லை. எனவே பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வசதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
* டெல்லியில் 18 மெட்ரோ நிலையம் மூடல்
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்று வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தையொட்டி நேற்று 18 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக டெல்லி மெட்ரோவில் பல ஸ்டேஷன்கள் மூடப்பட்டு இருந்தன.
