சென்னை: அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 72,186 பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஆணையிட்டிருப்பதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போர்க்கால வேகத்தில் ஆள்தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தவெக, இன்று வரை ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது இளைஞர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக காலி பணியிடங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி இளைஞர்கள் வாக்களித்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை தவெக அரசுக்கு உண்டு.
ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட 2026-க்கான ஆண்டு திட்டத்தின்படி, பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26 என 1,326 பணியிடங்களுக்கு மட்டும் தான் மூன்று ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 31.38 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் ஒரு கோடி பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இது தவிர்க்க முடியாதது ஆகும். அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியிருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026- 27-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
