சென்னை: தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 27ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
