நீட் தேர்வை எதிர்த்து காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து: டிடிவி.தினகரன் ஆவேசம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து. நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலி போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010ம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக்கொள்கிறதா அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகார தொனியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா?

தனது கடந்த கால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமூடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: