பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மேலும் 2 டிஎன்ஏ ஆய்வகங்கள் அமைக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும வகையில், தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. ஆய்வகங்களை அமைக்க உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரியும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க உத்தரவிடக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், புதிதாக ஆறு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் மரபணு பரிசோதனை ஆய்வகங்கள் (டிஎன்ஏ டெஸ்ட்) செயல்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார். விசாரணையின்போது நீதிபதிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க உயர் நீதிமன்றத்தில் குழு செயல்பட்டு வருகிறது.

சிறப்பு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிப்பது இயலாது. பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர்கள் தான் விசாரணையை தள்ளிவைக்க கேட்கின்றனர் என்று தெரிவித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related Stories: