சென்னை: சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேபோல், அண்மையில் நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பிறகு, மீண்டும் இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம்?.
எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற லாக்கப் படுகொலைகள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி (பாமக தலைவர்: தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
மது வணிகம் செய்ததாக கடந்த 17ம்தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலர்கள் 3 பேர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தூத்துக்குடி நகரம், அமுதாநகர் பகுதியைச் சார்ந்த டாஸ்மாக் ஊழியர் அருணாச்சலம் (24) சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி தென்பாகம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்று மாலையே தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் காவலர்களால் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அருணாச்சலம் உயிரிழப்பதற்கு முன்பு போலீசார் தன்னை தாக்கியதாக கூறும் வாக்குமூல வீடியோ வெளியாகி உள்ளது. தாளமுத்துநகர் காவல்நிலைய காவலரும், தென்பாகம் தெற்கு காவல் உதவி ஆய்வாளர், காவலர் உட்பட 4 பேர் தாக்கியதாலே அருணாச்சலம் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சபரி வர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் சென்று சித்தரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் காவலில் அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் அத்தனை பேர் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அருணாச்சலம் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
