சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ. 4.5 கோடி கடனாகப் பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார்.
அந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பு அளித்தார். அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனைய விதிக்கிறேன். வாங்கிய செக் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பை வழங்கும்போது நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
