கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல் மணிகளை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்

தா.பழூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்புகுடி ஊராட்சி வடவார் தலைப்பில் விவசாயிகள் நெல் மணிகளை திறந்த வெளியில் கொட்டி வைத்து விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதகளம், காக்கநேரி, வேம்புகுடி, தென்னவநல்லூர், வடவார் தலைப்பு, குழவடையான், கண்டியங்கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடி 600 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அரசு சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளில் இருந்து நெல்லை கொள்முதல் செய்து வந்தனர்.

இந்த ஆண்டு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நபரை பட்டம் நெல் நடவில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆண்டு போதிய மழை மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாயிகள் நெல்மணிகளை விளைவித்து தற்போது அறுவடை துவங்கி உள்ளனர். அறுவடை செய்யப்படும் நெல் மணிகளை அரசு கொள்முதல் செய்யும் இடத்தில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர். கடந்த ஆறாம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் வடவர் தலைப்பு கொள்முதல் நிலையம் திறப்பது குறித்து எந்த தகவலும் வெளிவராதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அறுவடை செய்த நெல்மணிகள் முட்டு முட்டாக குவியல்கள் போட்டு மூடப்பட்டு வைத்திருந்த நிலையில் விவசாயிகள் தரப்பில் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மண்டல மேலாளர் என அனைத்து துறை அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்பொழுது வரை நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு எந்த வித முகாந்திர பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் கடும் பாடுபட்டு வாடகை டேங்கர் மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றி அறுவடை செய்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியுமா என்ற ஏக்கத்தில் கொட்டி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

தற்போது அதிகப்படியான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நெல் மணிகள் அதிகப்படியான காய்ச்சல்களை சந்தித்து வருகிறது. மேலும் வானம் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டு வருவதால் மழை பெய்யும் பட்சத்தில் நெல்மணிகள் நனைந்து முளைப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகையால் விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்மணிகளை காலம் தாழ்த்தாமல் நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்து விவசாயிகளுடன் இருந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: