பெரம்பலூர், ஜூலை 23: குரும்பலூரில் உள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரி முன்பு முற்போக்கு மாணவர் கழகம் சார்பாகக் நடைபெற்ற கண்டன ஆரப்பாட்டத்தை, போலீசார் பாதியில் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனநாயக முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக, பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் (விசிக) மாநிலத் துணைச் செயலாளர் அம்பேத் கோகுல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 3 மாணவிகள் உட்பட 40 பேர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.
நேற்று கல்லூரி முன்பாக முற்போக்கு மாணவர் கழகத்தினர் கல்லூரி மாணவருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி லலித்குமார் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) பாலமுருகன் தலைமையில், பெரம்பலூர் (ஊரகம்) காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா, சப். இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஒன்றிய அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செய்யச் செய்தனர். இதனால் கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 12 மணிக்கே கல்லூரி வகுப்புகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்று (23ஆம் தேதி) வியாழக் கிழமை கல்லூரிக்கு முதல்வர் கீதப்பிரியா விடுமுறை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
