சேலம், ஜூலை 23: சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துகின்றனர். அதன்படி நடப்பு 2026-2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள் ‘‘இளையோர் திறன்’’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் 5 பிரிவுகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது. பள்ளி அளவிலான போட்டிகள் இன்று (23ம் தேதி) தொடங்கி, அடுத்தடுத்து குறுவள மையம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் என போட்டிகள் நடக்கிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 2.80 லட்சம் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை சிறப்பாக நடத்திட, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சிஇஓ எல்லப்பன் உத்தரவிட்டுள்ளார். இதில், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு 1-ல் 9 வகையான போட்டிகளும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு 2-ல் 15 வகையான போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பிரிவு 3-ல் 18 வகையான போட்டிகளும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு 4 மற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு 5-ல் தலா 32 வகையான போட்டிகளும் நடத்தப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் (சிறப்புப் பள்ளிகள் உட்பட) பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கு பெறச்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் 2,32,056 ேபர், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 48,121 பேர் என மொத்தம் 2,80,177 மாணவ, மாணவிகள் ஏதாவது ஒரு போட்டியிலாவது பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
போட்டிகளுக்கான நடுவர்களாக பணிபுரிய உரிய கலைப்பிரிவின் வல்லுநர்களைக் கண்டறிந்து நியமிக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெறாது. ஆண், பெண் பாகுபாடின்றி பொதுப் போட்டியாக நடைபெறும். ஒரு நபர் எவையேனும் 3 தனிப் போட்டிகள் மற்றும் 2 குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும். பள்ளி அளவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றிபெறும் தனிநபர் மற்றும் குழுவினர் மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றவராவார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு குழந்தைகளுக்கு 15 வகையான போட்டிகள்
‘‘சேலம் மாவட்டத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் இத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள 21 வகையான குறைபாடுகளில் அறிவுத் திறன் சார் குறைபாடுகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு மற்றும் மூளை முடக்கு வாதம் ஆகிய 3 குறைபாடுகள் உள்ள மாணவ-மாணவிகளுக்கு மட்டும் தனியாக 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இம்மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளை வீடியோ எடுத்து எமிஸில் பதிவேற்றம் செய்து அடுத்தடுத்த நிலைகளில், அந்த வீடியோ வழியே மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,’’ என்பது குறிப்பிடத்தக்கது.
