இந்தியாவில் பிளாஸ்டிக் பேனாக்களைப் பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றால் நிலமும் நீரும் மாசடைவதோடு, மனித உடல்நலத்திற்கும் தீங்கு ஏற்படுகிறது.
காகிதமற்ற, பேனா இல்லாத டிஜிட்டல் யுகத்தை நோக்கி இந்தியா அதிவேகமாக நகர்ந்தாலும், எழுது பொருட்கள் சந்தையில் இன்னும் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் பால் பாயிண்ட் பிளாஸ்டிக் பேனாக்களின் பங்கு 70 சதவீதம் ஆகும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்தான் பிளாஸ்டிக் பேனாக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வெறும் 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மலிவு விலையில் கிடைக்கும் இந்த பேனாக்கள் எளிதாக நம் கைகளில் புழக்கத்தில் உள்ளன.
“5 ரூபாய் பேனாவுக்கு ஏன் 5 ரூபாய் கொடுத்து ரீஃபில் மாற்ற வேண்டும்? புதுப் பேனாவை வாங்கிவிடலாம்” என்ற மனப்போக்குதான் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் 450 கோடி பிளாஸ்டிக் பேனாக்கள் தூக்கி எறியப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்படும் பேனாக்களிலிருந்து கார்சினோஜெனிக் காட்மியம் போன்ற நச்சு உலோகங்கள் நிலத்திலும் நீரிலும் கசிகின்றன. இது மண்ணின் வேதியியல் தன்மையை மாற்றி விவசாயத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நீர் மற்றும் உணவு வழியாக மனித உடலுக்குள் நுழைந்து கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அபாயத்தையும் உருவாக்குகிறது.
இதற்கு மாற்றாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரீபென் இந்தியா என்ற அமைப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட பேனாக்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்து வருகிறது. பிளாஸ்டிக் பேனாக்களை அந்த அமைப்புக்கு அனுப்புவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். மேலும், மூங்கில், காகிதம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பேனாக்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜியோ டாமின் பேசுகையில்:
“நீடித்து பயன்படுத்தக்கூடிய பொருட்களையே நாம் வாங்க வேண்டும். ஒரு நல்ல நுகர்வோராக, பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பேனாக்களாக இருந்தாலும், மற்ற பொருட்களாக இருந்தாலும், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
இது வெறும் மக்கும் பொருள், மக்காத பொருள் என்ற பிரச்சினை மட்டுமல்ல. அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல்வேறு வேதிப்பொருட்கள், அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கம், ஒவ்வொரு பேனா உற்பத்தியின் பின்னணியிலும் இருக்கும் கார்பன் உமிழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடு என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நெகிழி (பிளாஸ்டிக்) பிரச்சினை என்பது அது மக்கும் பொருளா, மக்காத பொருளா என்பதைக் கடந்த மிகப்பெரிய அபாயகரமான பிரச்சினையாகும். நீண்டகால தீர்வை நோக்கி செல்ல வேண்டுமெனில், நுகர்வோராக நாம் முதலில் நீடித்து பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல், இத்தகைய கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களையும் அதற்குப் பொறுப்பேற்கச் செய்வது, நீடித்த தீர்வாக அமையும்.”
இனி ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பேனாவை வாங்கும் முன் யோசியுங்கள். உங்கள் சிறிய மாற்றம் இந்த பூமியையும் அதன் உயிரினங்களையும் காக்க உதவும்.
ஒரு பேனா புரட்சி செய்யலாமா?
