சோழவந்தான் ரயில் நிலைய பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்து பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பிரபலம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் மதுரைக்குச் செல்வதென்றாலும், திருநெல்வேலி, தூத்துகுடி செல்வதென்றாலும் சோழவந்தான் ரயில் நிலையத்தைக் கடந்துதான் செல்கின்றன.

வந்தேபாரத், பாண்டியன், அந்தியோதயா போன்ற ரயில்கள் இங்கு நின்று செல்லவதில்லை என்றாலும், வைகை போன்ற ஒரு சில முக்கிய ரயில்கள் நின்று செல்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலையில் பாண்டியன், வந்தே பாரத், அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதுபற்றி பொதுமக்கள் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

ரயில்கள் நின்று செல்லாவிட்டாலும், பிரதமர் நரேந்திர மோடியின் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ், சோழவந்தான் ரயில் நிலையம் சமீபத்தில் புதுபிக்கப்பட்டு, நடைமேடை, மின் தூக்கி வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர்.

மேலும், அந்த பலகையின் அருகிலேயே, நரேந்திர பதவி விலகு, தர்மேந்திர பிரதான் பதவி விலகு, பாண்டியன், அந்தியோதயா, பொதிகை வண்டியை சோழவந்தானில் நிறுத்து என்று தமிழிலும், BAN NEET என்று ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் நிலைய ஊழியர்கள் வெள்ளை பெயின்ட் கொண்டு அதை மறைத்தனர். இதை எழுதியவர்கள் யார்? என்பது குறித்து ரயில்வே காவல் துறை அதிகாரிகள் மற்றும் சோழவந்தான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: