கள்ளக்குறிச்சி அருகே பெருமங்கலம் கிராமத்தில் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்

*கிராம மக்கள் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பெருமங்கலம் கிராமத்தில் குடிநீர் வசதி, மின்விளக்கு சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் பெருமங்கலம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாளுக்கு நாள் குடிநீர் பிரச்னை தீவிரமடைந்து வருவதால் அன்றாட தேவைகளுக்கு கூட பொதுமக்கள் அண்டை கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் பல இடங்களில் சுத்தம் செய்யப்படாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

மேலும் தெருக்களில் உள்ள மின் விளக்குகள் பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் தேக்கம், தெரு மின்விளக்குகள் பழுது உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பெருமங்கலம் கிராமத்தில் நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்தல், பழுதடைந்த தெரு மின் விளக்குகளை உடனடியாக சீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: