கிணத்துக்கடவு: டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டமும் உள்ளது என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நேற்று மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி: பல மதுபான கடைகளில் கூட்ட நெரிசல் காரணமாக மது வழங்கும் கவுண்டர்களில் விற்பனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.
மதுக்கூடங்களில் ஆங்காங்கே பாட்டில்கள் குப்பைகள் போல் சிதறி கிடக்கிறது. சிலர் மது போதையில் படுத்து கிடக்கின்றார்கள். இந்த நிலை தொடரக்கூடாது. சீரமைக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நடத்தப்பட்ட விவாதத்தில் உணவகத்துடன் கூடிய மதுபான கடைகள் செயல்படுத்தலாமா?,
தனியார் மயமாக்கலாமா?, அரசு மதுபான கடைகளின் கட்டமைப்புகளை மாற்றி அமைக்கலாமா?, டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூடி விடலாமா? என விவாதிக்கப்பட்டது. இதில், உணவகத்துடன் கூடிய மதுபான கடை என்பதை மட்டும் பெரிதுபடுத்தி விட்டார்கள். தனியார் மயமாக்கப்படும் என்ற திட்டமும் கலந்துரையாடலில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
