×

பழநி கோயில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம் மாஜி இணை ஆணையரிடம் 7 மணி நேரம் விசாரணை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று 6வது நாளாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவநேசன், பழநி கோயிலின் சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், விஏஓ சின்னச்சாமி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் நிலத்தை பதிவு செய்வதற்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பியது குறித்து அறநிலையத்துறை ஆணையர், செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதா? பத்திரப்பதிவு விவகாரத்தில் உயரதிகாரிகள் தரப்பில் ஏதேனும் வழிகாட்டுதல் சொல்லப்பட்டதா? மேலும், சம்பந்தப்பட்ட இடத்தின் மூலப்பத்திரத்தில் உள்ள நெறிமுறை சாசனங்கள் குறித்தும், அறக்கட்டளை நிர்வாகத்தின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்ட விதம் குறித்தும் விசாரணையின்போது கேட்டுள்ளனர்.

நில விவகாரம் நடைபெற்ற காலத்திலேயே உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது எப்படி? நில விவகாரத்தில் அரசியல் முக்கிய புள்ளிகளின் அழுத்தம் ஏதும் இருந்தனவா? இதுதொடர்பாக ஏதேனும் விசாரித்தனரா? தகவல் ஏதும் தரப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்துள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர்.

* 1880ல் இருந்து ஆவணம் ஒப்படைப்பு
சிபிசிஐடி விசாரணை முடிந்து வெளியே வந்த முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வழக்கு குறித்த ஆவணங்களை கேட்டிருந்தனர். மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாக கடந்த 1880ல் இருந்து பராமரிக்கப்படும் ஆவணங்கள், கோப்புகளை சிபிசிஐடி போலீசிடம் கொடுத்துள்ளோம்’’ என கூறினார்.

* பழநி ஆபீசில் 10 மணிநேரம் விசாரணை
பழநி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு உயர்மட்ட விசாரணை குழு, நேற்று 2வது நாளாக பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர். பத்திரப்பதிவு அலுவலகத்தின் 3வது மாடியில் உள்ள அறையில் கதவை அடைத்தபடி அங்குள்ள அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வாக்குமூலங்கள் கேமராவிலும் பதிவு செய்யப்பட்டன. காலை 9 மணிக்கு துவங்கிய விசாரணை 10 மணி நேரத்திற்கும் மேலாக இரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

* நிலம் வாங்கியவர் முன்ஜாமீன் மனு
ரூ.100 கோடி நில முறைகேடு தொடர்பான வழக்கில், முன்ஜாமீன் கோரி, நிலத்தை வாங்கிய திருப்பூரை சேர்ந்த வெள்ளத்துரை, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ராஜசேகர், சிபிசிஐடி போலீசாரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்தார்.

Tags : Palani ,Temple ,Former ,Joint Commissioner ,CBCID ,Palani Murugan ,Dindigul district ,Palani Temple… ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...