×

பாளை சிறையில் எம்எல்ஏ மார்க்கண்டேயனுடன் சந்திப்பு காவல்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அடக்க முயற்சிக்கிறது தவெக அரசு: கனிமொழி எம்பி கண்டனம்

நெல்லை: தமிழக முதல்வர் விஜய் குறித்து விமர்சித்ததாக அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை விளாத்திகுளம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் இரவில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏவை, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலை நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த கனிமொழி அளித்த பேட்டி: பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை என்பது திமுகவுக்கு புதிதானது கிடையாது. ஏற்கனவே எங்கள் கட்சியின் தலைவர் கலைஞர் இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர். திமுகவினர் யார் இந்த சிறைச்சாலைக்கு வந்தாலும் பெருமையாக தான் வருவார்கள். அச்சுறுத்தல்கள், வழக்குகள், கைது போன்றவைகளுக்கு பயப்படுபவர்கள் தி.மு.க.வினர் கிடையாது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பதற்கு தி.மு.க தயாராக உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணனை இன்னும் கைது செய்யாதது ஏன்? ஆனால், முதல்வர் விஜய்யை தவறாக பேசியதற்காக எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்ககூடிய நிலை உள்ளது. மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் அக்கறை இல்லாத தவெக அரசு இவ்வாறு காவல்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை அடக்க முயற்சிக்கிறது. அதே வேளையில் த.வெ.க.வினர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை எவ்வளவு விமர்சனம் செய்தார்கள் என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.

இதற்கு திமுக எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. தவெகவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. யார் விமர்சனம் செய்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை. தவெக யாருக்கு பயந்து அரசியல் செய்கிறார்களோ அதே நிலையில் தான் ஆட்சி நடத்தி வருகிறார்கள். பாஜ பெயரை சொல்வதற்கு கூட அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.

* ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
கைதாகி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் தூத்துக்குடி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு மீது இன்று நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.

Tags : MLA ,Markandeyan ,Palai ,Thavega government ,Kanimozhi ,Nellai ,Vilathikulam ,DMK ,Tamil Nadu ,Chief Minister ,Vijay ,Palai Central Jail ,Palai.… ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...