×

நள்ளிரவில் வீடு புகுந்து நெல்லை மேயருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் அதிரடி கைது; துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: நெல்லையில் மேயர் ராமகிருஷ்ணணின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பதுங்கியிருந்தவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கிட்டு (எ) ராமகிருஷ்ணன், நெல்லை டவுன் வேணுவன குமாரர் கோயில் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி பணிகளை முடித்த பிறகு அங்கிருந்து காரில் உதவியாளர்களுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.

டவுன் மெயின் ரோட்டில் காரை விட்டு இறங்கிய மேயர் ராமகிருஷ்ணன், அங்கிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் மொபட்டை கீழே சாய்த்த நிலையில் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். மேயர் ராமகிருஷ்ணன் அவர்களை கடந்து தனது வீட்டிற்குள் உதவியாளர்களுடன் சென்றார். இந்நிலையில் 3 பேர் மேயர் வீட்டிற்குள் திடீரென அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த மேயரின் உறவினர் பெண் நீங்கள் யார் என கேட்டதற்கு மேயரை கொலை செய்ய வந்திருப்பதாக கூறினர்.

இதனால் பதறிய அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அதைக்கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் மர்ம நபர்கள் இரு பைக்குகளில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேயர் ராமகிருஷ்ணன் நெல்லை டவுன் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேயர் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வந்தனர். தகவலறிந்து நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களும் மேயர் வீட்டுக்கு திரண்டு வந்தனர்.

அப்போது மேயர் வீட்டருகே ஏற்கனவே மொபட்டை கீழே சாய்த்த நிலையில் நின்றிருந்த மர்ம நபர்களில் ஒருவனும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று நடந்த சம்பவங்களை கண்காணித்ததை கண்டறிந்த போலீசார், அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை பொதுமக்கள் தாக்கினர். அவர்களிடமிருந்து அவரை மீட்ட போலீசார் விசாரணைக்காக டவுன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது அப்ஸல் (25) என்பது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்படி உடன் வந்த அதே தெருவைச் சேர்ந்த அப்துல் அஜிசையும் (23) போலீசார் கைது செய்தனர். மாநகராட்சி பணிகள் தொடர்பாக 2 பேரும் நேரில் வந்து மிரட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் இந்த சம்பவத்தில் உடனிருந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேயர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* பெங்களூரு கூலிப்படையா?
நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘கடந்த சில தினங்களாகவே எனக்கு சில கோப்புகள் தொடர்பாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. எனது வீட்டிற்கு வந்த நபர்கள் என்னை கொலை செய்யும் நோக்கில் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவர்களை யாரோ பெங்களூருவில் இருந்து இதற்காக அழைத்து வந்துள்ளனர்.

ஏற்கனவே அந்த நபர் மீது வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஒரு இடத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி என்னை மிரட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நடந்தவற்றை கட்சி தலைமைக்கும் தெரிவித்து விட்டேன்’’ என்றார்.

Tags : Nellai ,Mayor ,Ramakrishnan ,DMK ,Nellai Corporation… ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...