×

அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது கொடூரமாக லத்தி சார்ஜ் செய்வதா? எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

சென்னை: அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது கொடுரமாக லத்தி சார்ஜ் செய்வதா என்று எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ தேசிய பொதுச் செயலாளர் முகமது இல்யாஸ் தும்பே வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நீதி, ஒன்றிய அமைச்சரின் பொறுப்பேற்பு, கல்விச் சீர்திருத்தம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான லத்தி சார்ஜ் மற்றும் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியில் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு மிரட்டலையும், வன்முறையையும் கையாண்டு போராட்டத்தை ஒடுக்க நினைப்பது வேதனையளிக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும், குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைதியான முறையில் போராடும் உரிமையையும் அப்பட்டமாகச் சீர்குலைப்பதாகும்.

காவல்துறையின் இந்த அத்துமீறல் மற்றும் வன்முறை குறித்து உடனடியாக ஒரு தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைதி வழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட மற்றும் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவர்களை பொறுப்பாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : STBI ,Chennai ,STBI party ,National General Secretary ,Mohammed Ilyas Thumbay ,NEET ,
× RELATED தமிழ்நாட்டில் 15 நாட்கள் இடைவெளியில்...