மதுரை: கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கில், அரசு தரப்பில் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரூரில் கடந்தாண்டு செப்.27ல் தவெக சார்பில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் வேலை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சி துணைச்செயலாளர் சீனி அகமது ஆகியோர் ஐகோர்ட் கிளையில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், தற்காலிக பணி நியமனம் மட்டும் வழங்கவும், கருணைப்பணி நியமனம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிர்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், இதேகோரிக்கையுடைய மனுக்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களுக்கான பதில் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. எனவே, அந்த மனுக்களோடு சேர்த்து இந்த மனு மீதான விசாரணையையும் தள்ளி வைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. முதல் மாத ஊதியம் பெறுவதற்கு முன்பாக வழக்கை விசாரிக்க வேண்டும்.
எனவே, அரசு தரப்பில் வரும் 24ம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல எனக் கூறிய நீதிபதிகள் விசாரணையை வரும் 27ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
