விவசாயிகள் மீது தவெக அரசு அலட்சியம் டிடிவி.தினகரன் விமர்சனம்

சென்னை: தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது என டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 லஞ்சம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: