கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி; அதிகாரிகள் பல அணிகளாக பிரிந்து கிடக்கின்றனர் முக்கிய துறைகள் முடங்கின : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியை அமர்த்திய ஜென்சி தலைமுறை உள்ளிட்ட யாருமே நிம்மதியாக இல்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்து 71 நாட்கள் வீட்டிலே முடங்கிக் கிடந்த நிகழ்வை நாம் கடந்து போனாலும், ஒருவர் உயிரிழந்தாலே அவருக்கு சட்டத்தில் என்ன தண்டனை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே கரூருக்கு விஜய் முதல்வராக சென்று ஓடு, ஓடு, வர்றான் பாரு, வேட்டைக்காரன் என வீரவசனம் பேசுகிறார்.

மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே, நீதி அரசர்கள் கமிஷன் அமைத்து, இந்த சிபிஐ வழக்கு இன்றைக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிய 5 நாட்களுக்குள்ளே மாற்றுவது என அரைவேக்காட்டுத் தனமான ஒரு நிர்வாக அணுகுமுறையை விஜய் கையாள்கிறார்.

அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் தனித்தனி அணியாக இருக்கின்றனர். அதிமுகவிலிருந்து அகதிகளாக சென்றவர்களுக்கு தலைமை தாங்கும் செங்கோட்டையனும் தனி அணியாக இருக்கிறார். இதை மிஞ்சும் வகையிலே அரசு உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலாளர் தலைமை, விஜய் ஆலோசர்கள், நல விரும்பிகள் என அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சுகாதாரம், தொழில், கல்வி, நகராட்சி, ஊராட்சி, பொதுப்பணி, மின்சாரம், நெடுஞ்சாலையென அத்தனை துறைகளும் முடங்கிக் கிடக்கிறது. எம்எல்ஏ, பதவியை ராஜினாமா செய்துவிட்டு போன அதிமுக அகதிகள் அணி, இலவு காத்த கிளியாக இடைத்தேர்தல் அறிவிப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: