மின்வெட்டுடன் மின் கட்டணம் இருமடங்கு உயர்வு என புகார்; இலவச மின்சாரத்துக்கு மக்களிடமே வசூல்: டிடிவி, நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு; மக்களை திரட்டி போராட்டம் என எச்சரிக்கை

 

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையோடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பி அளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும்.

பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதன திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.மேலும், அவர் தனது குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்னைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு நேர்மையான மற்றும் துல்லியமான சேவைகளை வழங்க வேண்டிய தவெக அரசின் மின்சார வாரியம், தனது பொறுப்பில் இருந்து தவறியதன் காரணமாக, மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்கு தவறான கட்டணங்களை அனுப்பியுள்ளது. இத்தகைய தவறான பில்லிங் முறைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது தவெக விஜய் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது.

எனவே கணக்கீட்டுப் பிழைகளால் மக்கள் மீது இமாலயக் கட்டணம் சுமத்தப்பட்டுள்ள இந்த பிரச்னையில், முதல்வர் தனிக்கவனம் செலுத்தி, போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.மேலும், தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மின்வாரியம் உடனடியாக திருப்பி தருவதோடு, மின்கட்டண குளறுபடிகளுக்கு நிரந்தர தீர்வு காணச் சிறப்பு தணிக்கையை தவெக அரசு தொடங்க வேண்டும். மின்வாரியத்தின் இந்த பிரச்னைகளை உடனடியாக சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்க தவறினால், பாஜ சார்பில் ஒட்டுமொத்த மக்களை திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: