மும்பை-அகமதாபாத் இடையே இழுத்தடிப்பு; புல்லட் ரயில் திட்டத் தாமதத்திற்கு இந்தியாவே காரணம்: ஒன்றிய அமைச்சர், அதிகாரிகள் மீது புகார்; ஜப்பானிய முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

 

டோக்கியோ: இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை-அகமதாபாத் இடையே அமைய உள்ளது. 2017 செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இத்திட்டம் ஆரம்பத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 2023ல் சேவையைத் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே அமையவுள்ள முதல் பகுதி பயணம் 2027 ஆகஸ்ட் 15 அன்று தொடங்க தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 2030 ஆண்டில் ஜப்பான் ‘இ10’ ரக ரயிலை வழங்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தற்போது ஜப்பானில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் முதற்கட்ட ரயில் போக்குவரத்தும் 2030க்கு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிர்ணயிக்கப்பட்ட 2023ல் தொடங்க முடியாததற்கு இந்தியாவே காரணம் என்று ஜப்பான் முன்னாள் அமைச்சர் ஹிதேகி மக்கிஹாரா குற்றம் சாட்டி உள்ளார். ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புல்லட் ரயில் திட்டத்தை ஒன்றிய அமைச்சர் மற்றும் இந்திய அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். ஜப்பான் முன்னாள் அமைச்சர் ஹிதேகி மக்கிஹாரா இதுதொடர்பாக கூறியதாவது: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு இந்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளே காரணம். ஷின்கான்சென் திட்டத்திற்கான பேச்சுவார்த்தைகளின் போது, ​​அதிகாரிகள் தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினர். சுயநலத்தை முன்னிறுத்தினர். அவர்கள் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டனர்.

இதனால் இத்திட்டம் அசல் ஷின்கான்சென் மாதிரியிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. குறிப்பாக, பொறுப்பு வகித்த இந்திய அமைச்சர் மிகவும் மோசமாக நடந்துகொண்டார். உயர் மட்டத்தில் இருப்பவரே அப்படி இருக்கும்போது, ​​முறையான அல்லது கண்ணியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழியே இல்லை. இத்திட்டத்திற்காகத் தங்கள் முழு அர்ப்பணிப்பையும் வழங்கிய ஜப்பானிய மக்களின் கவுரவத்தைக் கருத்தில் கொண்டு நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். இத்திட்டம் முன்னேறாமல் இருப்பதற்கு முழுமையான காரணம் இந்தியத் தரப்புதான் என்று நான் 100% உறுதியாக உணர்கிறேன். ஜப்பானியப் பிரதமர் சனாயே டகாயிச்சி இந்த மாதம் தொடக்கத்தில் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்திய போதும் இப்பிரச்சினையில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் புல்லட் ரயில் திட்டம்
* மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடமானது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும்.
* இது இந்தியா-ஜப்பான் இடையிலான உத்திசார் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பின் முக்கிய அங்கமாகவும் திகழ்கிறது.
* 508 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும் 12 நிலையங்கள் மூலம் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸையும் அகமதாபாத்தையும் இணைக்கும்.
* மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இவ்வழித்தடம் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் எட்டு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை புல்லட் ரயில் திட்டம் என்னவாகும்?
2017ல் இந்தியாவில் தொடங்கிய முதல் புல்லட் ரயில் திட்டமே இன்னும் இயக்கத்திற்கு வரவில்லை. 9 ஆண்டுகள் ஆகியும் எந்த பணிகளும் முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் டெல்லி, வாரணாசி, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது எப்போது தொடங்கும், இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கடும் விமர்சனம்
ஜப்பான் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு பற்றி புகார் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி பவன் கேரா, ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில்,’இந்தியா-ஜப்பான் ஷின்கான்சென் திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்ற ஜப்பானின் முன்னாள் அமைச்சர் ஒருவர், ஜப்பான் பிரதமர் டகாயிச்சியின் வருகை இருந்தபோதிலும் இத்திட்டம் தோல்வியடைந்ததாகவும், ரயில் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ‘சிக்னலிங்’ அமைப்பிலிருந்து ஜப்பான் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். இது மோடி அரசின் மற்றொரு தோல்வி வெளிப்பாடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மறுப்பு
இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம் குறித்து ஜப்பானிய முன்னாள் அமைச்சர் ஹிடெகி மக்கிஹாரா முன்வைத்த குற்றச்சாட்டுகளை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மறுத்தார். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது மிக வேகமான விகிதத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சூழலிலும், டோக்கியோவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இதுபற்றி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ நீங்கள் குறிப்பிடும் பதிவை நாங்கள் பார்த்தோம். அது ஒரு தனிப்பட்ட கருத்து மற்றும் உண்மைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் குறித்த இந்தியா-ஜப்பான் இடையிலான பேச்சுவார்த்தைகள் உண்மையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஜப்பான் ‘இ20’ ரக ரயில்களை வழங்கும், ஆனால் அவை 2030களின் தொடக்கத்தில்தான் கிடைக்கும். ஏனெனில் அந்த ரயில் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: