தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம் கர்நாடகாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்: தமிழ்நாட்டிற்கு சாதகமாக வெளியான இறுதி உத்தரவு

 

 

புதுடெல்லி: தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட பல மாவட்டங்கள் வழியாக பாயும் தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரு மாநிலங்கள் இடையேயான இந்த பிரச்னையை தீர்க்க புதிய தனி தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில், இதுதொடர்பாக ஒன்றிய அரசு உடன்பாட்டுக் குழுவை அமைத்தும் எந்த தீர்வும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, ‘நீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்கும் விதமாக தனி தீர்ப்பாயத்தை தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த தினத்தில் இருந்து ஒரு மாதத்தில் ஒன்றிய அரசு அமைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. பின்னர் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பாயம் அமைக்க மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கி கடந்த மே மாதம் 8ம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், தனி தீர்ப்பாயம் அமைக்கத் தேவையில்லை என்றும், பிப்ரவரி மாதம் 2ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரி கர்நாடகா அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த மே மாதம் 8ம் தேதி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்திருந்த உறுதியில், ‘தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைப்பதற்கான அமைச்சகங்களுக்கு இடையேயான கலந்தாய்வு நிறைவு செய்யப்பட்டு, ஜல்சக்தி அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது; தற்போது வரைவு குறிப்பு ஒன்றிய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றவுடன் தனி தீர்ப்பாயம் அமைக்கும் அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும்’ என்று உறுதி அளிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த நீதிபதிகள், வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவில் எந்தவித திருத்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறி கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். இதன் மூலம் தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரத்தில் தனி தீர்ப்பாயம் அமைப்பது தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: