நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்திய அவசர சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தீர்மானம்: மக்களவை ஏற்றுக் கொண்டது

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34ல் இருந்து 38 ஆக உயர்த்திய அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை மக்களவை ஏற்றுக் கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு கடந்த மே மாதத்தில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், இதுதொடர்பாக ஒன்றிய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்தது.

அந்த அவசர சட்டத்திற்குப் பிறகு, உயர்த்தப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அவசர சட்டம் என்பது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத அவசர சூழல்களில் சட்டங்களை இயற்றுவதற்காக அரசு பயன்படுத்தும் நிர்வாக அதிகாரம். அவசர சட்டம் 6 மாதத்திற்கு செல்லுபடியாகும். ஆனாலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும், அந்த அவசர சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் 6 வாரங்கள் அல்லது 42 நாளில் காலாவதியாகி விடும். அதற்காக, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் அவசர சட்டத்திற்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. நடைமுறைகளின்படி அவசர சட்டத்திற்கு பதிலாக மசோதா கொண்டு வரப்படும் போது எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவது வழக்கம். அதன்படி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த எதிர்ப்பு தீர்மானத்தை மக்களவை ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்துள்ளது.

Related Stories: