ககன்யான் திட்டத்துடன் தொடர்புடைய 100 இஸ்ரோ விஞ்ஞானிகள் திடீர் பதவி விலகல்: ஒன்றிய அரசு கடும் அதிர்ச்சி: பணி விலகும் விதிகளை கடுமையாக்கி உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவின் விண்வெளி நிறுவனத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறி வருவதை தொடர்ந்து பணியில் இருந்து விலகும் விதிகளை அரசு கடுமையாக்கி உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோவின் ஏ பிரிவு அறிவியல்/தொழில்நுட்ப அதிகாரிகளிடம் இருந்து தாமாக முன்வந்து விருப்ப ஓய்வு மற்றும் , பதவி விலகி வருவதாக கூறப்படுகின்றது. இதுவரை 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பதவி விலகி இருப்பது ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமாக்கள் தொடர்பான விதிகளை கடுமையாக்கி இஸ்ரோவின் முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு விண்வெளித் துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘இஸ்ரோவில் சமீபகாலமாக, மதிப்புமிக்க ககன்யான் மற்றும் பிற முக்கிய திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் உட்பட, இஸ்ரோவின் ‘குரூப் ஏ’ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களிடமிருந்து விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகள் பெருமளவில் வருவதாகவும், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கவனிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மதிப்புமிக்க மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் மற்றும் பிற முக்கியமான திட்டங்களுடன் தொடர்புடைய ஏ பிரிவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் இருந்து வரும் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு கோரிக்கைகளை வழக்கமாக நடைமுறையாக கருதி ஏற்க வேண்டாம். விஞ்ஞானி மற்றும் பொறியாளர் பதவிகளில் உள்ள அல்லது அதற்கு கீழுள்ள அறிவியல் அல்லது தொழில்நுட்பப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும்

இதுபோன்ற கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் இறுதி முடிவிற்காக அந்த துறையின் இயக்குநர்களின் தெளிவான பரிந்துரைகளுடன் விண்வெளித்துறைக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த உத்தரவுகள் சதீஷ் தவான் விண்வெளி மையம், திரவ உந்துவிசை அமைப்புகள் மையம், விண்வெளி பயன்பாட்டு மையம் , தேசிய தொலை உணர்வு மையம், இஸ்ரோ தொலைத்தொடர்பு, கண்காணிப்பு மற்றும் கட்டளை நெட்வொர்க் மற்றும் முதன்மை கட்டுப்பாட்டு வசதி ஆகிய மையங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பாதிக்கப்படும் திட்டங்கள்
இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானிகள் விலகியதால் ககன்யான் திட்டம், நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வரும் திட்டமான சந்திரயான்-4; இந்தியாவின் விண்வெளி நிலையமாக அமையவுள்ள பாரதிய விண்வெளி நிலையம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டமான மங்கள்யான்-2 திட்டப்பணிகள் அப்படியே முடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மோடி அரசால் நடந்த விபரீதம்
* இந்தியாவை பொறுத்தவரை விண்வெளித்துறையில் இஸ்ரோ மட்டுமே கோலோச்சியது. ஆனால் 2020ல் தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறையை மோடி அரசு திறந்து விட்டது.
* 2023ல் இந்திய விண்வெளி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதும் நாடு முழுவதும் தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை இஸ்ரோவில் இருக்கும் மூத்த விஞ்ஞானிகளை குறிவைத்து அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்தன.
* இந்தியாவில் தற்போது 400க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன; இவை ரூ. 50 ஆயிரம் கோடிமதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதில் 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.
* பிக்சல், துருவா ஸ்பேஸ், ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மாஸ், பெலாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இத்துறையில் முன்னணியில் உள்ளன.
* இஸ்ரோவில் இருந்து சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் விலகி உள்ளனர். இதில் பெங்களூருவில் உள்ள யுஆர் ராவ் செயற்கைகோள் மையம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மையங்களிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
* விலகிய விஞ்ஞானிகளில் சிலர் விண்வெளித் துறை சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.

* விலகிய முக்கிய விஞ்ஞானிகள் யார்?
* விலகியவர்களில் மூத்த விஞ்ஞானி விக்டர் ஜோசப் டி என்பவரும் ஒருவர். இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ‘ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் எம்கே III (ஜிஎஸ்எல்வி எம்கே III) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். ‘ககன்யான்’ விண்வெளிப் பயணத் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள ஏவு வாகனமான எல்விஎம் 3-ன் திட்டத் தலைவராக சுமார் 13 மாதங்கள் பணியாற்றிய பிறகு, விக்டர் ஜோசப் பிப்ரவரி மாதத்தில் பணியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

* இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். சோமநாத், சென்னையைச் சேர்ந்த விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ இயக்குநர்கள் குழுவில் பார்வையாளராக இணைந்துள்ளார்.  2025 ஜனவரி வரை இஸ்ரோ தலைவராகப் பணியாற்றிய அவர், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கியது மற்றும் இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா-எல்1 ஏவப்பட்டது உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்களை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இஸ்ரோ எதிர்கொண்ட பெரும் தோல்விகள்
இஸ்ரோவில் இருந்து மூத்த விஞ்ஞானிகள் விலகியதால் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளன. அதன் விவரம்:

* இஸ்ரோவின் நம்பகமான ‘போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள்’ (பிஎஸ்எல்வி) ஏவு வாகனம், ஓராண்டுக்குள் இரண்டு தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது.

* ஜனவரி மாதத்தில், இஓஎஸ் என்1(EOS-N1) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் பல வணிகரீதியான செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி62 ஏவு வாகனம், அதன் மூன்றாம் கட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாகத் திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றது.

* கடந்த ஆண்டு மே மாதம், பிஎஸ்எல்வி- சி61/EOS-09 (ரிசாட்-1பி) ஏவு வாகனம் 529 கி.மீ உயரத்திலுள்ள சூரிய-ஒத்திசைவு சுற்றுப்பாதையை அடையத் தவறியது. மூன்றாம் கட்டத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டினால், சுமார் 203 வினாடிகளுக்குப் பிறகு எரிபொருள் அறையின் அழுத்தம் ( திடீரெனக் குறைந்ததால், அப்பயணம் நிறுத்தப்பட்டு அந்த ரேடார் செயற்கைக்கோள் அழிந்தது.

* கூடங்குளம் தகவல்கள் கசியவிடப்படவில்லை
ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறுகையில்,’ கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முக்கியத் தரவுகள் எதுவும் திருடப்படவில்லை அல்லது கசியவிடப்படவில்லை. கூடங்குளம் அணுமின் திட்டம் குறித்த சலசலப்பிற்கும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நிலையத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்தச் சம்பவமும் நடக்காத நிலையில், இது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

* ‘பலர் வருகின்றனர், பலர் செல்கின்றனர்’ ஒன்றிய அமைச்சர் அலட்சிய பதில்
இஸ்ரோ விஞ்ஞானிகள் பதவி விலகுவது குறித்த கேள்விக்கு ஒன்றிய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,’ இஸ்ரோவில் மிகப் பெரிய பணியாளர் படை உள்ளது. சிலர் வெளியேறும்போது பலரும் புதிதாக இணைகிறார்கள். பலர் சென்றுள்ளனர், பலர் வந்துள்ளனர். இதில் எந்த சர்ச்சையும் இல்லை’ என்றார்.

Related Stories: