கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி ரூ.30 கோடி முதல் பரிசு டிக்கெட் வெளியீடு

திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த சில வருடங்களாக ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ. 25 கோடி வழங்கப்பட்டு வந்தது. இந்த வருடம் முதல் பரிசுத்தொகை ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியை திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் வி.டி.சதீசன் வெளியிட்டார். வரும் 20ம் தேதி முதல் இந்த டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. செப்டம்பர் 26ம் தேதி ஓணம் பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் நடைபெறுகிறது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 500 ஆகும். 2வது பரிசாக தலா ரூ. 1 கோடி வீதம் 20 பேருக்கும், 3வது பரிசாக தலா ரூ. 25 லட்சம் வீதம் 20 பேருக்கும், 4வது பரிசாக தலா ரூ. 5 லட்சம் வீதம் 10 பேருக்கும், 5வது பரிசாக தலா ரூ. 2 லட்சம் வீதம் 10 பேருக்கும் கிடைக்கும். முதல் பரிசுக்கான லாட்டரியை விற்கும் ஏஜெண்டுக்கு மட்டும் ரூ. 3 கோடி கமிஷனாக கிடைக்கும். இந்தியாவிலேயே ஒரு அரசு லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடி வழங்கப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: