டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வரும் போது எம்.பி-க்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்திற்கு வரும் போது எம்.பி-க்கள் ஸ்மார்ட் வாட்ச் மட்டுமின்றி ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமரா பேனாக்கள் போன்ற நவீன மின்னணு சாதனங்களை தவிர்க்க வேண்டும் என்று மக்களவை செயலகம் (Lok Sabha Secretariat) கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் எந்தப் பகுதியிலும் உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஸ்மார்ட் கண்ணாடிகள், பேனா கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டு கொண்டுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட அறிவுறுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மக்களவை செயலகம் வழங்கி உள்ளது. மேலும் இத்தகைய நவீன சாதனங்கள் நாடாளுமன்றத்தின் ரகசியங்கள் மற்றும் உறுப்பினர்களின் தனி உரிமைகள் பாதிக்கப்பட கூடும் எனவும் மக்களவை செயலகம் எச்சரித்துள்ளது.
