பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை 8 மின்சார ரயில்கள் ரத்து!!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சென்னை எழும்பூர்- விழுப்புரம் இடையே கூடுவாஞ்சேரி ரயில்வே பணிமனையில் நாளை பிற்பகல் 1.40 மணி முதல் 5.40 மணி வரை 4 மணி நேரம் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், இந்நாளில் சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 11.28, பிற்பகல் 12.02, 12.30, 1.45 ஆகிய மணிகளில் செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.35 மணி, 2.15, மாலை 3, 4.25 மணிகளில் கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரையிலிருந்து நாளை பிற்பகல் 11.28 மணி, 12.02, 12.30, 1.45 ஆகிய நேரத்திலும், தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு பிற்பகல், 2.30, மாலை 3.15, 4, 5.24 ஆகிய நேரத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: