பழங்குடியின மலை கிராமத்தில் நூலகம் திறப்பு

சத்தியமங்கலம், ஜூலை 16: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மலைப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் உள்ள புதுக்காடு பழங்குடியின கிராமத்தில் ரீடு நிறுவனம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட படிப்பகத்துடன் கூடிய நூலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

ரீடு இயக்குனர் கருப்புசாமி விழாவிற்கு தலைமை தாங்கி காமராஜர் பிறந்த நாளில் பழங்குடியின மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் படிப்பகத்தை திறந்து வைப்பது உணர்ச்சி பூர்வமாக உள்ளதாக தெரிவித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஆசனூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நூலகம் மற்றும் படிப்பகம் திறப்பு விழாவை முன்னிட்டு மலை கிராம மக்கள் பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் சமூக ஆர்வலர் மாதேவி, எழுத்தாளர் நித்யா இறையன்பு, லைவ் லிகுட் இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதுக்காடு கிராம வளர்ச்சி குழு செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

 

Related Stories: