பகுதி 3
சென்ற இதழின் தொடர்ச்சி…
அவருடைய துக்கத்தைச் சகிக்க முடியாமல் சரஸ்வதி தேவி அங்கே தோன்றினாள். அந்த சரஸ்வதியிடம் காளிதாசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.“அம்மா! இந்தப் போஜராஜனை எப்படியாவது பிழைக்கவை! பிழைக்கவை!’’ என வேண்டினார். சரஸ்வதிதேவி சொல்லத் தொடங்கினாள்.“காளிதாசா! அவனைப் பிழைக்கவை என்று கேட்கின்றாயே! உனக்கு உண்மை தெரியுமா? உனக்கே இன்னும் ஏழரை நாழிகைதான் ஆயுள். இன்னும் ஏழரை நாழிகை வரை (மூன்று மணி நேரம்) தான் நீ உயிருடன் இருப்பாய்! உனக்கு உண்டான ஆயுள் அவ்வளவுதான்’’ என்றாள். காளிதாசர் பரபரத்தார்;
“அம்மா அதில் ஒன்றும் கவலை இல்லை. என் ஆயுளில் பாதியை, நான் போஜமன்னருக்குக் கொடுக்கிறேன். அவரை எழுப்புங்கள்!’’ என வேண்டினார். சரஸ்வதிதேவி இரங்கினாள்.
“சரி.. முன்பு பாடியதை மாற்றிப் பாடு! உனக்காக அவனுக்கு நான் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) உயிர் தருகிறேன். இருவரும் ஏதாவது வாய் வார்த்தையாவது பேசிக் கொள்ளுங்கள்!’’ என்று அருள் புரிந்தாள்.
உடனே காளிதாசர், தான் முன்பு பாடியதை மாற்றிப் பாடினார். அவ்வாறு அவர் பாடி முடித்ததும், போஜ மன்னர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார். காளிதாசர், போஜமன்னரைக் கட்டிக் கொண்டு,“மன்னா! இப்படிச் செய்து விட்டீர்களே! இன்னும் மூன்றே முக்கால் நாழிகை தானே நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்!’’ என்று வருத்தத்தோடு கூறினார்.
போஜமன்னரோ,“காளிதாசா! இறந்து போவது ஒரு துக்கமா? உன் வாக்கிலிருந்து வந்த அமிர்தத்தைக் கேட்டேனே! அந்த ஒரு பாக்கியம் கிடைத்தது போதாதா? இன்னும் மூன்றே முக்கால் நாழிகை இருக்கிறது. கவலைப்படாதே! நம்முடைய நினைவாக ராம சரித்திரத்தை, அந்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் பாடி முடித்துவிடலாம்’’ என்றார். உடனே காளிதாசரும், போஜ மன்னருமாக ராம சரித்திரத்தைப் பாடினார்கள். ஆளுக்கு ஒரு ஸ்லோகமாக மாற்றிமாற்றிப் பாடினார்கள். அற்புதமான நூல் நிறைவு பெற்றது. அதுதான் சம்ஸ்க்ருதத்தில் – வடமொழியில் மிகப் பிரபலமான “போஜ சம்பு’’ எனும் அற்புதமான காவியம்! பாடி முடித்தவுடன் போஜ மன்னரும் காளிதாசரும் இறைவனுடைய திருவடியை அடைந்தார்கள்.
(நிறைந்தது…)
