ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 123 (பகவத்கீதை உரை)
புலன்களைக் கட்டுப்படுத்துவதால் லௌகீக சுகங்களை இழப்பதும், அதேசமயம் முழுமன ஈடுபாடின்றி யோகத்தில் ஆழ்வதால் அதுவும் கிட்டாமலும் இரட்டை நஷ்டத்தை நான் ஏன் அடைய வேண்டும்?’’ என்று கேட்கிறான், அர்ஜுனன். ‘‘உன் கண்ணோட்டத்திலிருந்து உன்னுடைய சந்தேகம் நியாயமானதே!’’ என்று அவனுக்கு பதிலுரைக்கிறார், கிருஷ்ணன். ஆமாம், இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை நம்மால் உணர முடியும்.
ஆனால், யோகம் சித்தித்தது என்பதை எப்படி அறிவது? அப்படி அடைந்த வருக்கு ஏற்படும் உடல் அல்லது உள்ள மாற்றம்தான் எத்தகையது? வெறும் அனுமானத்தால், தான் யோகநிலையை அடைந்துவிட்டதாக ஒருவன் கருதிக் கொள்ள முடியுமா? அவ்வாறு யோகநிலையை அடைந்தவர்கள் அத்தகைய தங்களுடைய அனுபவங்களைப் பிறருக்குச் சொல்லியிருக்கிறார்களா, என்ன ஆதாரம்? காஞ்சி மஹாஸ்வாமிகள் இதற்கு அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார். யோக ப்ரஷ்டன் என்பவன், தான் உலகியல் வாழ்வில் இணைந்திருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், எப்போதும் ஈஸ்வர ஸ்மரணையிலேயே ஆழ்ந்திருப்பான்.
அவனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே இறைவனைச் சார்ந்தே இருக்கும். இதுவே யோகநிலை (பக்தி யோகம்). இவ்வாறு எப்போதும் கடவுள் நினைவிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரை காமம், கோபம், குரோதம், லோபம் போன்ற துர்குணங்கள் நெருங்கவே நெருங்காது.
‘‘யார் அவர் யோக ப்ரஷ்டன்?’’ கிருஷ்ணன் விவரிக்கிறார்:
“ப்ராப்ய புண்யக்ருதாம் லோகானுஷித்வா சாச்வதீ ஸமா
சுசீனாம்ஸ்ரீ மதாம் கேஹே யோகப்ரஷ்டோ பிஜாயதே’’ (6:41)
‘‘இப்பிறவியில் மிகுந்த நேர்மையுடன் யோகப் பயிற்சி மேற்கொள்பவர், இறை நியதியாக இவ்வுலகை நீத்தாலும், அதற்குப் பிறகு அவர், புண்ணியாத்மாக்கள் உறையும் சொர்க்கத்தில் சஞ்சரிப்பார். பிறகு அவர், நற்குணங்கள் மிக்க ஒரு செல்வந்தர் குடும்பத்திலோ அல்லது ஞான யோகியின் வீட்டிலோ அடுத்த பிறவி எடுப்பார். (இந்தப் பிறவியில் அவர் பரிபூரண இறையருளைப் பெற்று, அடுத்து பிறவியே இல்லாதவராக, பரமாத்மாவுடன் ஒன்றிவிடும் நிலையை அடைவார்).
‘‘அதவா யோகினோமேவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜன்ம யதீத்ருசம்’’ (6:42)
‘‘யோக ப்ரதிஷ்டன், நற்குணவான் குடும்பத்தில் அடுத்த பிறவி எடுக்கக் கூடும் அல்லது யோகியர் குலத்திலேயே அவன் தோன்றக்கூடும்’’ அதாவது ஆன்மிகப் பாதையில் பயணம் செய்பவர், இடையில் பயணத்தைத் தொடர முடியாமல் போனாலும், அடுத்த பிறவியில் அந்தப் பயணத்தைத் தொடரவும், அதை நிறைவு செய்யவும் கூடியவராகவே இருப்பார்.
அவரே யோக ப்ரஷ்டன். இவன் இப்பிறவியை இவ்வாறு முடித்துக் கொண்டு, சொர்க்கம் செல்கிறான். அங்கே எல்லாமே சுகம்தான். எந்தத் துக்கச் சாயலும், எங்குமே இல்லை. விரும்பியதெல்லாம் தேட வேண்டிய அவசியமே இல்லாமல், தானே வருகிறது. ஆமாம்! வெறும் நினைப்பாலேயே தேவையானதைப் பெற்றிட அங்கே கற்பக விருட்சம் இருக்கிறதே! ஆனால், இப்படி வெகு எளிதாக எதுவும் கிட்டிவிடுவதால், அலுப்பு, திகட்டல் ஏற்பட்டுவிடுகிறது! ஆனால், பூவுலக வாழ்வில் எல்லா சுகத்துக்குப் பின்னாலும் ஒரு தேடல் இருந்தது.
அந்த முயற்சியின் பலன் இனிக்குமானால், வாழ்வின் சுவை கூடுகிறது. அதுவே கசக்குமானால், இனிப்புக்காக மீண்டும் முயன்றிட மனசு விரும்புகிறது. பூமியில் ஒரு சுவை இல்லை. அறுசுவை! ஆனால் சொர்க்கத்தில் ஒரே ஒரு சுவைதான் – இனிமை. இந்த மிதமிஞ்சிய ஒற்றைச் சுவை திகட்டிவிடுவதால், ஆன்மா மீண்டும் ஒரு பிறவிக்காக ஏங்குகிறது. தன் முற்பிறவி மேற்கொண்ட ஆன்மிக, யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறது. அதனாலே அந்தப் பிறவி சான்றோன் ஒருவனுடைய குடும்பத்தில் நிகழ்கிறது. இந்த சம்பவம், முற்பிறவியில் இடையே விட்டுப்போன யோகத்தைத் தொடரும் பாலமாகவே அமைகிறது.
இதனால் இந்தப் புதிய பிறவியில், யோகப் பயிற்சி முழுமையடைய, அந்த ஆன்மா அடுத்த பிறவி வேண்டாத முக்தி நிலையை அடைந்து இறைவனோடு நிரந்தரமாக ஒன்றி விடுகிறது. உலக வாழ்வில் துக்கம், வெறும் வேதனையையும், சோதனையையும் மட்டும் தருவதல்ல. அது மனதைப் பக்குவப்படுத்துகிறது. மரணத் தறுவாயில், தன் யோகப் பயிற்சி முழுமையடையாததை மனம் உணர்கிறது. அதனாலேயே அடுத்த பிறவியில் பயிற்சியைத் தொடரவும், யோகத்தில் நிறைவடையவும் அந்த ஆன்மா தயாராகிறது!
‘`சம்சாரம், ஒரு சாகரம். அதிலிருந்து மீளவே முடியாது’’ என்று எதிர்மறை அர்த்தம் ஒன்று, அடுத்தடுத்து பிறவி எடுப்பதன் நோக்கத்தைச் சொல்கிறது. ஆன்மிகப் பயணம் தடைப்பட்டவனுக்கு, மரணத்துக்குப் பிறகு, சொர்க்க வாழ்க்கையே கிடைத்தாலும், அவன் பூவுலகில், தான் ஏற்கெனவே அனுபவித்த துக்க அனுபவங்களை மீண்டும் அடைய விரும்புகிறான், ஏனென்றால் சொர்க்கம் அத்தனைத் திகட்டல். இதைத்தான் சம்சார சாகரத்திலிருந்து மீளவே முடியாது என்று புரியாதவர்கள் சொல்கிறார்கள். இவ்வாறு அடுத்தடுத்து பிறப்பதால், தர்மம் சார்ந்த நெறிகளைக் கடைப்பிடித்து, நற்செயல்களை ஆற்றவல்லவர்கள், தம் பாவ மூட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொள்கிறார்கள் என்றுதான் கருத வேண்டும்.
மனித வாழ்க்கையில், முயற்சிகள் ஏன் தோல்வியுற வேண்டும்? இதற்கு முக்கிய காரணம், ஒரு நோக்கத்துக்காக முயற்சியில் இறங்கு முன்னரே அதன் பலாபலன்களைப் பற்றிய கற்பனையிலும் இறங்கி விடுவதுதான். ஒவ்வொரு முயற்சிக்கு முன்னும் `‘வெற்றி பெற்றுவிட வேண்டும்’’ என்ற உத்வேகம் கொள்வது சரிதான். ஆனால் அந்த முயற்சி நற்பலன் ஈட்டக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறதா, அடிப்படையில் அந்த முயற்சியே சரிதானா, பற்றிக் கொள்ளும் ஆதாரங்கள் வலுவானவைதானா, எந்த இடரையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், அவற்றை வெற்றிகொள்ளும் மன உறுதியும் இருக்கிறதா என்றெல்லாம் சோதித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பக்குவம் கிட்டிவிட்டால், நோக்கம் எளிதாகவும், விரும்பியபடியும் நிறைவேறும் என்பதில் சந்தேகமே இல்லை. இது தியானம் பயில்வதற்கும் யோகம் அனுஷ்டிப்பதற்கும் பொருந்தும்.
‘‘இரட்டை நஷ்டம் அடைய வேண்டியிருக்குமோ என்று ஏன் கலங்குகிறாய்?’’ அர்ஜுனனை ஆறுதல் படுத்துகிறார், கிருஷ்ணன். “முக்கியமாக யோக நியமத்தில் எந்தக் கட்டத்தில் நிற்கிறேன் என்பது உனக்கே சந்தேகமாக இருக்கிறது என்று சொல்கிறாய்.
அதாவது யோகப் பயிற்சியில் அமர்வதற்கு முன்னாலேயே உனக்கு இந்த சந்தேகம்! என்ன ஆகுமோ! என்று ஏன் அச்சம் கொள்கிறாய்? முயற்சியில் வென்றால் சந்தோஷம், பாராட்டு, விருது. தோற்றால், அது அற்புதமான அனுபவம்! இரண்டுமே சம எடையில்தான் உள்ளன. சந்தோஷமும், நஷ்டமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங் களே! ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. மோட்சம் அடைவதைக் குறித்து யோகப் பயிற்சி மேற்கொள்ளும் நீ, அது கிட்டாவிட்டாலும், சொர்க்கப் பதவியை அடைவாய் என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். பிறகு அங்கிருந்து நல்லதோர் குடியில் பிறந்து அந்த நோக்கம் நிறைவேற நீ யோகப் பயிற்சியைத் தொடர்வாய். இப்பிறவியில் அக்கரையை உன்னால் அடைய முடியாவிட்டாலும், அது இக்கரையைவிட மோசமானது ஆகாது. ஆகவே இக்கரையைத் துறக்கத் தயங்காதே, அஞ்சாதே….’’
ஒரு நாட்டிற்கு யோகி ஒருவர் சென்றார். அவரை வரவேற்றுப் பெரிதும் உபசரித்தான் மன்னன். அவரிடம் ஞான போதனையைப் பெற அவன் விரும்பினான். அவரிடம்,
‘‘ஐயனே, நான் பல கோயில்களைக் கட்டியிருக்கிறேன், எத்தனையோ இறை திருமேனிகளை அந்தக் கோயில்களில் நிறுவியிருக்கிறேன். அந்தக் கோயில்கள் மூலம் பல பக்தர்கள் இறைப்பணியாற்ற வாய்ப்புகளை வழங்கியிருக்கிறேன். அன்னசத்திரம், தண்ணீர்ப் பந்தல் என்று பல தருமங்களைச் செய்திருக்கிறேன். எனக்கு என்னென்ன நற்பலன்கள் கிட்டும்?’’ என்று ஆவலுடன் கேட்டான். அவர் வெறுமையாகச் சிரித்தார்.
‘‘உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது!’’ என்று வெளிப்படையாகச் சொன்னார். மன்னன் திடுக்கிட்டான், அதைவிட மூர்க்கமாகக் கோபப்பட்டான்.‘‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? ஒரு ஞானி பேசுவது போல இல்லையே இது! என் நற்பணிகளைப் பாராட்டக்கூட வேண்டாம், ஆனால் இவற்றால் எந்தப் பயனும் எனக்கு இல்லை என்று வெகு அலட்சியமாகக் கூறுகிறீர்களே!’’‘‘உனக்கு நான் இப்போது என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் புரியாது. அதை நீயே உணர்வதுதான் உனக்கு நன்மை. நான் புறப்படுகிறேன்.
அந்த ஞானம் உனக்கு வரும்போது நிச்சயம் நீ என்னை நினைத்துக் கொள்வாய்’’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆண்டுகள் உருண்டோட, மன்னனும் தன் அறச் செயல்களை, விட்டுவிடாமல் தொடர்ந்து செய்தான். குடிமக்கள் அனைவரும், அவனை ‘தர்மப் பிரபு’ ‘கொடை வள்ளல்’ என்றெல்லாம் பாராட்டி, போற்றிப்புகழ்வதைக் கேட்டு மகிழ்ந்தான். இதையெல்லாம் பார்க்க அந்த யோகி இங்கே இல்லையே என்று குரூரமாக ஏங்கினான். ஒரு கட்டத்தில் அவனை மரணம் நெருங்கியது. அவன் கட்டாயமாக சிந்திக்க வேண்டிய தருணம் அது.
ஆமாம், தான் புரிந்த தர்மச் செயல்களுக்குத் தனக்குக் கிடைத்த பலன்தான் என்ன? மக்களின் புகழ்ச்சி, தான் நிர்மாணித்த கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த பக்தர்கள் எல்லோரும் இறைவனை தற்காலிகமாக மறந்துவிட்டு, தன்னை இருகரம் கூப்பித் தொழுத விசுவாசம்! அனைவருக்கும் முன்னால் அளிக்கப்பட்ட மரியாதை, பரிவட்டம், சிறப்பு நிவேதனம், காட்டிய பவ்யம்…. எல்லாம், எல்லாம்… தற்காலிகம்.
அப்போதைக்கான உணர்வுப் பெருக்கு அது. அது நீடிக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், தான் அடிக்கடி மக்கள் முன்தோன்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தன்னைப் பாராட்டுகிறார்களா என்பதை அறிய முடியாது!“ஆனால், மனசுக்குள் ஏதோ குறை நெருடுகிறதே! என்ன அது? நான் கொண்டிருக்கும் அகங்காரத்தின் கோர நிழலா? நான் உருவாக்கிய கோயில்கள், ஸ்தாபித்த விக்ரகங்கள், உருவாக்கிய தான தர்மங்கள் எல்லாம் அந்த அகங்காரத்தின் ஆபரணங்கள்தானா! இதைத்தான் யோகி பூடகமாக உரைத்தாரா? நான் ‘உணரவேண்டும்’ என்று சொன்னாரே, அது இதைத்தானா? இம்மைச் சுகத்தில் நான் மறுமை வாய்ப்புகளை இழந்துவிட்டேனோ….?’’ இந்த மன்னனின் நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம். பலன் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் கிருஷ்ணன் இதே மனோபாவம் அர்ஜுனனிடமும் குடிகொண்டிருப்பதை அறிந்து, அவன் போக்குப்போல போய் அவனுக்கு போதனை செய்கிறார். ‘வீரனே’, ‘வில்லாளனே’, ‘அகன்ற தோளுடையவனே’, ‘பார்த்தா’ என்றெல்லாம் அவனைக் கொண்டாடுகிறார். இதனால் அவன் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகிறான். தன்னை இந்த அளவுக்கு பகவான் மதிக்கிறார் என்றால் அவர் உள்ளத்தில் எனக்கு இடம் அளித்திருக்கிறார் என்றுதானே அர்த்தம் என்று புளங்காகிதம் அடைகிறான். அதனாலேயே, அவர் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கிறான்.
அவர் சொல்லும் யோசனைகளைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும், அவற்றால் தன் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும், அவர் குறிப்பிடுவதுபோல யோக மலையில் ஏதோ ஒரு படியை அடைய முடியும் என்றும் நம்பிக்கை கொள்கிறான். தன்னால் மோட்சம் என்ற அக்கரையை அடைய முடியாவிட்டாலும், இடையே சொர்க்கம் என்ற தீவு எனக்குப் புகலிடம் அளிக்கத் தயாராக இருக்கிறது என்ற வகையில் அவன் மனதில் தெம்பு ஊறுகிறது. அங்கே தங்கி, குருமார்களுடன் பழகி, ஆசிபெற்றால், அது அடுத்த ஜன்மத்தை, மோட்சத்துக்கு வழிகாட்டும் நற்குடியில் தோற்றுவிக்கும்…..
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
