கருணை உள்ளம்கொண்ட அருட்பெருஞ்ஜோதி

சூரியக் குடும்பம்! உலகில் உள்ள அனைவருமே சூரியக் குடும்பம்தான். சூரியன் இல்லாவிட்டால் உயிர்க் குலங்கள் வாழ வழி ஏது? அதனால் தானே, உலகம் முழுவதையும் `சோலார் ஃபேமிலி’ என விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள். அந்தச் சூரியன் லௌகீகமாக, அதாவது வெளிப்புற வாழ்க்கையில் அனைவரையும் நன்றாக வாழ வைக்கலாம்; வெளிச்சத்தை வெள்ளமாகப் பாய்ச்சலாம். ஆனால், அகஇருளை, அதாவது உள்ளத்தின் உள்ளே உள்ள தீய குணங்கள் எனும் இருட்டை ஓட்ட அந்தச் சூரியனால் முடியாது.அதை, ஞானச் சூரியர்களால் மட்டுமே செய்ய முடியும். அப்படிப்பட்ட ஞானச் சூரியர்கள் இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் ஏராளமானோர் தோன்றியிருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் தங்கள் அனுபவம் என்னும் ஒளிக்கதிர்களை வீசி, மனித குலத்தின் அக இருளை மட்டுமல்லாமல், புற இருளையும் விலக்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உத்தமர்களில் ஒருவர், சென்னையில் உள்ள திருவொற்றியூர் தியாகேசப் பெருமான் சந்நதியில் நின்றபடி, “பாரோடு விண்ணாய்’’ எனத் தொடங்கும் திருவாசகப் பாடலை மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்தார். அப்பாடலில் உள்ள ‌‌“ஆரோடு நோகேன் ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்’’ என்ற வரிகளைப் பாடும்போது மனம் கரைந்து நெடுநேரம் பேச்சு மூச்சு இல்லாமல், தன்னிலை மறந்து அப்படியே சமாதி நிலைக்குப் போய்விட்டார்.

அவர் பாடிய திருவாசகப் பாடலின் வரிகளிலும், அவர் குரலிலும் மெய் மறந்து இருந்த அன்பர் கூட்டம், உத்தமரின் சமாதி நிலையைக் கண்டு கண்ணீர் சிந்தி உருகினார்கள். இப்படி… நீண்ட நேரம் ஆனது. தான் பரவசம் அடைந்து, அடுத்தவர்களையும் பரவச நிலையில் ஆழ்த்திய அந்த உத்தமர்… “ராமலிங்க சுவாமிகள்’’ எனும் “வள்ளலார்’’. அவருடைய சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி இது. அதோ! அவருடைய சமாதிநிலை கலையப் போகிறது. வாருங்கள்! மனதாலாவது அவர் அருகில் போகலாம்! நீண்டநேரம் சமாதி நிலையிலிருந்த வள்ளலார், மெள்ள மெள்ள உலகியல் உணர்வு வந்தபின் வீடு திரும்பினார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால், வீட்டில் எல்லோரும் கதவைத் தாழிட்டுக் கொண்டு தூங்கிவிட்டார்கள். அதைப் பார்த்ததும்…

அடுத்தவர் தூக்கத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்று இரக்கம் மேலிட்டு, வள்ளலார் வீட்டின் வெளித் திண்ணையிலே படுத்து விட்டார். உணவுக்கு வழி என்ன? அந்தச் சிந்தனையே இல்லை. வள்ளலார் தூங்கிவிட்டார். ஆனால்… அன்பைப் போதித்து அனைவருக்கும் நல்வழி காட்டப் போகும் வள்ளலார், பசித்திருக்க வடிவுடைய நாயகி விடுவாளா?

“இந்தக் குழந்தை இப்போதுதானே நம்மைத் தரிசித்துவிட்டுப் போனது. இது போய்ப் பசியோடு படுக்கலாமா?’’ என்று எண்ணிய அன்னை, திருவொற்றியூர் வடிவுடைய நாயகி, வள்ளலாரின் அண்ணி வடிவில் தானே உணவு கொண்டுவந்தாள். வள்ளலாரை எழுப்பி உணவளித்து மறைந்தாள். சற்று நேரத்தில்… வள்ளலார் படுத்திருக்க, வீட்டுக்கதவை திறந்து கொண்டு அண்ணி வெளியில் வந்து, வள்ளலாரை எழுப்பி,`

`உணவு உண்ணாமல் இப்படிப் படுக்கலாமா? என்னை எழுப்பக் கூடாதா?’’ என்றார். வள்ளலார் நடந்ததைச் சொல்லி,“நீங்கள் தானே வந்து உணவளித்தீர்கள்’’ என்றார். அண்ணி திகைத்தார்;“நான் இப்போது தானே கதவைத் திறந்து கொண்டு வருகிறேன்…’’ என்றார்.

வள்ளலாருக்கு உண்மை புரிந்தது. அண்ணி வடிவத்தில் வந்து அருளமுதம் அளித்தது, அன்னை வடிவுடை நாயகிதான் என உணர்ந்து துதித்தார். இது ஏதோ ஏழாம் நூற்றாண்டில் நடந்த ஞானசம்பந்தர் வரலாறு அல்ல! 19ஆம் நூற்றாண்டில் நடந்த வரலாறு இது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று ஆத்ம தரிசனத்தில் திளைத்திருந்த வள்ளலாருக்குத் திருமணம் செய்யத் தீர்மானித்தார் அவருடைய மூத்த சகோதரர். பக்தியில் முழுகிப் பக்குவம் பெற்ற தம்பி துறவியாகப்போய்விட்டால் என்ன செய்வது என்பதே அண்ணனின் எண்ணம். முதலில் மறுத்த வள்ளலார், பிறகு ஒப்புக்கொண்டார்.

காரணம்?

திருஞானசம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது, அருட்பெரும்ஜோதி ஆண்டவன் பெரும் ஜோதியைத் தோன்ற வைத்து திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் அந்த ஜோதியில் புகுந்து தம்முடன் இணையுமாறு அருள் செய்தார் அல்லவா? அதுபோல… தன் திருமணத்திலும் இறைவன் அருள் புரியக்கூடும் என்பதாலேயே வள்ளலார், திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். அந்த அளவிற்கு அவருக்கு அருள் தாகம் மிகுந்திருந்தது.

அது மட்டுமல்ல. “சிவபெருமானே! சுந்தரரின் முதல் முறை திருமணத்தின் போது, நீ வலுவில் போய் அவரைத் தடுத்து ஆட்கொண்டாய் அல்லவா? அதுபோல என் திருமணத்தின் போது நீயே நேரில் வந்து, தடுத்தாட்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இறைவா! உன் பூத கணங்களில் ஒன்று வந்து என்னைத் தடுத்தாட் கொண்டால்கூடப் போதும். அவ்வாறு என் திருமணத்தின் போது நடக்கும் என்றால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்வேன்’’ என்று பாடி வேண்டினார்.

``முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல்
என் மணத்தில் நீ வந்திடா விடினும்-நின் கணத்தில்
ஒன்றும் ஒரு கணம் வந்துற்றழைக்கில் செய்ததன்றி
இன்னும் ஒரு மணம் செய்வேன்’’
(திருவருட்பா)

இறையருள் பெறுவதில்தான் எத்தனை ஆர்வம்! இதே ஆர்வம் இரக்கத்தோடு அடுத்தவருக்கு உதவுவதிலும் இருந்தது. அடிக்கடி திருவொற்றியூர் சென்று, அங்கே பாடிப்
பணிந்து பக்தி செய்து வந்த வள்ளலார், ஒருநாள்… திருவொற்றியூரில் ஒரு திண்ணையில் படுத்து இருந்தார். அவர் காதுகள் இரண்டிலும் தங்கக் கடுக்கன்கள் இருந்தன. அவர் படுத்திருந்ததைப் பார்த்தான் ஒரு திருடன்;

“ஆஹா! காதுகளில் கடுக்கன்களோடு நன்றாகத் தூங்குகிறார் இவர். கடுக்கன் களைக் கிளப்பி விட வேண்டியதுதான்’’ எனத் தீர்மானித்த அத்திருடன், மெள்ளமெள்ள வள்ளலாரை நெருங்கினான். ஒருக்களித்துப் படுத்திருந்த வள்ளலாரின் மேலாக இருந்த காதில் இருந்து கடுக்கனைக் கழற்றினான். அப்போது… வள்ளலார் விழித்திருந்த நிலையில் இருந்தாலும், கொஞ்சம்கூட அசையவில்லை; நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப்போல அசையாமல் இருந்தார்.

திருடன், ஒரு காதில் உள்ள கடுக்கனைக் கழற்றி முடித்ததும், “பாவம் இவன்! இல்லாத கொடுமையால் தானே திருடுகிறான். இரண்டு கடுக்கன்களையும் இவன் எடுத்துக்கொண்டு போய்ப் பிழைக்கட்டுமே’’ என்று இரக்கப்பட்ட வள்ளலார், தூக்கத்திலேயே திரும்பிப் படுப்பதைப் போல மறுபுறம் திரும்பிப் படுத்தார். திருடன், அடுத்த கடுக்கனையும் கழற்றிக்கொண்டு போனான். அதன் பின் வள்ளலார் கடுக்கன் அணியவே இல்லை. இப்படிப்பட்ட ஞானிகள் பலர் உண்டு!

– பி.என்.பரசுராமன்

 

Related Stories: