சென்னை: செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இடத்தில் ஆசிரியர்கள் மற்றும் வார்டனை கட்டிப்போட்டு தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடினர். மேலும், சாலையில் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு பைக், செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவனை கைது செய்த போலீசார், மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியில் அரசினர் பாதுகாப்பு இடம் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த இடத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என 70க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசினர் பாதுகாப்பு இடத்தில் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அதில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டு 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போதே 5க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஆத்தூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து தப்பி சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு தொலைக்காட்சி பெட்டி மூலம் படம் ஒளிபரப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு வார்டனை 10க்கும் மேற்பட்ட குழுவினர் கடுமையாக தாக்கி அவர்களின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பிடுங்கி, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியையும் தாக்கி கேட்டின் பூட்டை உடைத்து வெளியே தப்பிச் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு – ஒரக்காட்டுப்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை மடக்கி அவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது தெரியவந்தது.
தப்பிச் சென்றுள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை, நாமக்கல், கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிறார்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் வார்டன் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர் முழு மது போதையில் தனது வீட்டிற்கு நள்ளிரவு 12 மணி அளவில் சென்றுள்ளார். அவர் வந்த தகவலை அறிந்த போலீசார் அதிகாலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எதற்காக ஆசிரியர்கள் வார்டனை தாக்கினர்? தப்பிச்சென்ற மீதமுள்ள 11 மாணவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவயதில் குற்றம் செய்யும் சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக இதுபோன்ற பாதுகாப்பு இடங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கண்ணாடி துண்டுகள் விழுங்கிய 3 பேருக்கு சிகிச்சை
இரு தரப்பு மோதலில் 19 பேர் மீது செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 12 பேர் ஆசிரியர்கள், வார்டன், காவலாளி உள்ளிட்டோரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். மேலும் மற்றொரு தரப்பை சிறந்த 3 பேர் கண்ணாடி துண்டுகளை விழுங்கிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
