சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: பயணிகள் அச்சம்

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அச்சமடைகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிந்து பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தன. இதுகுறித்து பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் சென்னை விமான நிலைய நிர்வாகத்திற்கு வந்தன. இதையடுத்து, சென்னை விமான நிலைய நிர்வாகம் கடந்த ஆண்டில் ப்ளூ கிராஸ் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து, இனவிருத்தி தடை அறுவை சிகிச்சை செய்து, நாய் கடி விஷம் முறிவு ஊசிகள் செலுத்தினர்.

அதன்பின்பு ஓரளவு, விமான நிலையத்தில் நாய்கள் நடமாட்டம் குறைந்தது. ஆனால், சமீப காலமாக சென்னை விமான நிலைய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் உள்பட விமான நிலையம் வளாகம் முழுவதும் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததோடு, நாய்கள் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளன. நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு, பயணிகளை விரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் வெளிநாட்டு பயணிகள் உள்பட விமான பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை விரட்டுகின்றன. இதனால் பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய ஊழியர்கள், விமான நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து விமான பயணிகள் தெரு நாய்கள் சுற்றி அலைவதை போட்டோக்கள் எடுத்து, சமூக வலைதளம் மூலம் சென்னை விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கையில், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, சென்னை விமான நிலையத்திற்குள் சுற்றும் நாய்களை அவ்வப்போது பிடிக்கும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதை மேலும் தீவிரப்படுத்த இருக்கிறோம் என்று பதில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது, ‘சென்னை சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரக்கூடியது.

இங்கு நாய்கள் பிரச்னைகள் தொடர்ந்து இருப்பதும், பயணிகள், ஊழியர்கள், காவலர்கள் உள்பட பல தரப்பினரும் பாதிக்கப்படுவதும் சரியானது இல்லை. எனவே விமான நிலைய அதிகாரிகள் நாய்களை நிரந்தரமாக, சென்னை விமான நிலைய பகுதிக்குள் வரவிடாமல் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விமான நிலையத்தில் நாய்கள் அவ்வப்போது ஒன்றோடு ஒன்று சண்டை இடுகின்றன. அப்போது பயணிகளும், ஊழியர்களும் பயந்து அலறிக் கொண்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. நாய்கள் பயணிகள் யாரையாவது கடித்து விட்டால், அது பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். எனவே அதுபோன்ற சூழ்நிலைகளுக்கு முன்பு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘விமான நிலையத்தில் நாய்கள் பிரச்னைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாய்கள் பிடிப்பவர்கள் மூலம், சமீபத்தில் சில நாய்களை பிடித்து சுமார் 25 கிலோமீட்டருக்கு அப்பால் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தோம். ஆனால் நாங்கள் வருவதற்கு முன்னதாக, அந்த நாய்கள் அனைத்தும் சென்னை விமான நிலையத்திற்குள் வந்துவிட்டன. இவ்வாறு நிலைமை இருக்கையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆனாலும் இப்போது உச்ச நீதிமன்றம், தெரு நாய்களை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நாங்களும் நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம்’ என்றனர்.

Related Stories: