சென்னை: முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு அளிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே திரண்டதால், தலைமைச் செயலகத்தின் வெளிப்புற நுழைவாயிலில் சுமார் 200 மீட்டருக்கும் மேலாக நீண்ட வரிசை காணப்பட்டது. தலைமைச் செயலகத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் காரணமாக வரிசையில் காத்திருந்தவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே உள்ளே சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், தங்களது கோரிக்கைகளை நேரடியாக அதிகாரிகளிடம் விளக்கி மனு அளித்தால் விரைவில் நடவடிக்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையால், பலர் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், அவர்களை உள்ளே அனுப்பாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
