14 அம்ச ஒப்பந்தத்தை சிதைத்துவிட்ட அமெரிக்கா.!! ஈரான் கடும் குற்றசாட்டு

தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பான மோதல் ராணுவத் தாக்குதல்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுடனான இஸ்லாமாபாத் ஒப்பந்தம் தற்போது முழு நெருக்கடியில் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா தங்களுடனான 14 அம்ச உடன்படிக்கையை மீறியுள்ளதன் மூலம் அதனை சிதைத்து விட்டதாகவும் ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசியிருக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, 14 அம்ச ஒப்பந்தத்தை அமெரிக்கா சிதைத்துவிட்டதாக குற்றம் சாட்டியதுடன், வாக்குறுதியை முதலில் மீறியது ஈரான் அல்ல என்று குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ஈரானின் கடமைகளுக்கான ஒரு மாத கால அவகாசம் முடிவடைவதற்குக்கூடக் காத்திருக்காமல், அந்த ஒப்பந்தத்தை முறித்து கொள்வதில் அமெரிக்கர்கள் மிகுந்த அவசரம் காட்டியதாகவும் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்களை தொடங்கி இருக்கும் நிலையில், பதிலுக்கு பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. முன்னதாக இரு நாடுகளுக்கிடையே எட்டப்பட 14 அம்ச வரைவுத் திட்டம், மோதல்களை நிறுத்துவதையும், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்ட சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு 60 நாள் கால அவகாசத்தையும் இத்திட்டம் உள்ளடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: